இந்திய வங்கிகளில் நாளுக்கு நாள் வங்கி கடன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து வங்கிகளும் அதிகம் தொகைக்குக் கடன் வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் ரிசர்வ் வங்கியும் கடன் மற்றும் இதர வங்கி நிர்வாகம் குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்து வங்கிகளைக் கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் 2022 ஆம் நிதியாண்டில் எந்த வங்கியில் அதிகப்படியான வங்கி மோசடிகள் பதிவாகியுள்ளது என்பதற்கான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியாவில் இருக்கும் 27 வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் 2022 ஆம் நிதியாண்டில் அதாவது, டிசம்பருடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் மொத்தம் 34,097 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி மோசடிகள் நடந்துள்ளது. இதற்காகச் சுமார் 96 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி இந்த 9 மாத காலகட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகபட்சமாக ரூ.4,820 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகளைப் பதிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத், வங்கி வாரியாக ரூ.100 கோடிக்கு மேல் நடந்த மோசடி விவரங்களைத் வெளியிட்டுள்ளார். இந்த தரவுகளின் படி பஞ்சாப் நேஷனல் வங்கி 10 வழக்குகள் கீழ் 4820 கோடி ரூபாயும், பேங்க் ஆப் இந்தியா 13 வழக்குகள் கீழ் 3925 கோடி ரூபாயும், யெஸ் வங்கி 11 வழக்குகள் கீழ் 3902 கோடி ரூபாயும், கனரா வங்கி 5 வழக்குள் கீழ் 2658 கோடி ரூபாய் அளவிலான மோசடிகளை பதிவு செய்துள்ளது.
இதில் இந்தியாவிலேயே அதிக அளவில் பண மோசடியில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஈடுபட்டுள்ளது. ரூ.4,820 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது. அம்பலமாகி உள்ளது. அதேசமயம் பேங்க் அஃப் இந்தியா அதிகபட்சமாக 13 மோசடி வழக்குகளைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.