இந்தியாவின் அந்நிய கடன் தற்போது ரூ.64.87 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசின் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசு, இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த அந்நிய கடன், கடந்த 2024 மார்ச் மாதம் ரூ.58.92 லட்சம் கோடியாக இருந்தது. இதுவே, 2025-ஆம் ஆண்டில் ரூ.64.87 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 10.1% அதிகமாகும்.
நாட்டின் மொத்த அந்நிய கடனில், அரசு வாங்கியுள்ள கடனை விட, நிறுவனங்களே அதிக கடன் (39.6%) பெற்றுள்ளன. அரசின் அந்நிய கடன் 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.13.10 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பாண்டு மார்ச் மாதத்தில் ரூ.14.83 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 13.3% அதிகமாகும்.
அதேபோல், நாட்டின் மொத்த அந்நிய கடனில், நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன் 2024 ஆண்டின் மார்ச் மாதத்தில் ரூ.40.82 லட்சம் கோடியாக இருந்தது. இதுவே, 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.53.26 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நிதித்துறை சாராத தனியார் நிறுவனங்களின் அந்நிய கடன் மட்டுமே ரூ.23,05,709 கோடியாக உள்ளது.