இந்திய ரூபாயின் மதிப்பானது சமீப காலமாக மிக மோசமான சரிவினைக் கண்டு வருகின்றது. இதற்கிடையில் வரவிருக்கும் மாதங்களில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79-81 ரூபாயாக சரிவினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, ரூபாயின் மதிப்பானது 77.63 ரூபாய் என்ற நிலையில் காணப்படுகின்றது. கடந்த மாதத்தில் ரூபாயின் மதிப்பு 77.92 ரூபாய் என்ற நிலைக்கு அதிகபட்சமாக சரிவினைக் கண்டது. இதற்கிடையில் USB AG, நோமுரா ஹோல்டிங்ஸ் இன்க் வரையில் பல நிபுணர்கள் ரூபாயின் மதிப்பானது மேலும் சரிவினைக் காணலாம் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. இது மேற்கொண்டு பணவீக்கத்தினை அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜூன் மாத தொடக்கத்தில் அன்னிய முதலீடுகள் வெளியேற்றமானது சற்றே மிதமாகியுள்ளது. டாலர் மதிப்பு மற்றும் பத்திர சந்தையானது நிலையானதாக உள்ளது. இதன் காரணமாக அன்னிய முதலீடுகள் பெரியளவில் வெளியேறுவதைத் தடுக்கலாம். எனினும் அமெரிக்காவின் பணவீக்கம் அதிகரித்தால், அது பத்திர சந்தை, டாலரின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். மேலும், வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். இது அன்னிய முதலீடுகள் வெளியேற வழிவகுக்கும்.
வரவிருக்கும் நாட்களில் அமெரிக்கா நுகர்வோர் பணவீக்க தரவு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் பணவீக்க கொள்கை கூட்டம் நடக்கவுள்ளது. ரிசர்வ் வங்கியிடம் கிட்டத்தட்ட 600 பில்லியன் டாலர் அன்னிய செலவாணி கையிருப்பு உள்ளது. இது ஏற்ற இறக்கத்தினை சமாளிக்க பயன்படும் என்றாலும், வரவிருக்கும் வட்டி விகித கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சவுதி அரேபியா ஜூலை மாதம் முதல் கச்சா எண்ணெய் விலையினை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இன்று காலை தொடக்கத்திலேயே கச்சா எண்ணெய் விலையானது 121 டாலர்களுக்கு மேலாக அதிகரித்து காணப்பட்டது. இது இறக்குமதியினை அதிகம் சார்ந்துள்ள இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம். எனவே, இதுவும் ரூபாயின் மதிப்பில் சரிவினை ஏற்படுத்தலாம். நவம்பர் இறுதிக்குள் கச்சா எண்ணெய் விலையில் பேரலுக்கு 81 டாலர்கள் வரையில் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.