மும்பை:
கொரோனா தொற்றுப் பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துவங்கி, கனரகத் தொழில்களும் உற்பத்தி முடக்கத்தைச் சந்தித்துள்ளன. வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் வேலையிழந்துள்ளனர்.
இது இந்தியாவின் 2021-22 நிதியாண்டிற்கான உள்நாட்டு உற்பத்திமதிப்பில் (ஜிடிபி) தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஏற்கெனவே தரமதிப்பீட்டு நிறுவனங்கள் கூறி வருகின்றன.அண்மையில், ‘எஸ் & பி குளோபல்ரேட்டிங்ஸ்’, 2021-22 நிதியாண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி கணிப்பை வெகுவாக குறைத்தது.அதைத்தொடர்ந்து, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ்’ அமைப்பும், நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி கணிப்பை 13.7 சதவிகிதத்தில் இருந்து, 9.3 சதவிகிதமாகக் குறைத்தது. தற்போது ‘பார்கிலேஸ்’ (Barclays) நிறுவனமும் நடப்பு நிதியாண்டிற்கான ஜிடிபி விகிதத்தை 9.2 சதவிகிதமாகக் குறைத்துள்ளது.
‘பார்கிலேஸ்’ நிறுவனம் முன்னதாக இந்தியாவின் ஜிடிபி விகிதம் 11 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்திருந்தது. பின்னர்அதனை 10 சதவிகிதமாக குறைத்தது. தற்போது 80 அடிப்படை புள்ளிகள் குறைத்து, மீண்டும் 9.2 சதவிகிதமாக மாற்றியமைத்துள்ளது.பெருகிவரும் கொரோனா தாக்கம், மந்தமான தடுப்பூசி நடைமுறைகள் உள்ளிட்ட பலவற்றையும் கருத்தில் கொண்டு, இந்த மாற்றம்செய்யப்பட்டுள்ளதாக கூறியிருக்கும் ‘பார்கிலேஸ்’, இந்தியா மூன்றாவது அலையால் பாதிக்கப்படும் பட்சத்தில் பிரச்சனை இன்னும்தீவிரமாகும்; அப்போது ஜிடிபி விகிதமானது 7.7 சதவிகிதமாக குறையலாம் என்றும் தெரிவித்துள்ளது.