சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவிற்கு குறைந்த விலையில் விற்க ரஷ்யா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் நிலையும், பொருளாதார நெருக்கடி ஏற்படும் நிலையும் உருவாக வாய்ப்புள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெஃப்ட் இந்தியாவிற்கு சந்தை விலையை விடக் குறைவான விலையில் கச்சா எண்ணெய் தர முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடைகளால் ரஷ்யப் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்திக்க உள்ளது. மேலும் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், எரிவாயு, நிலக்கரி உள்ளிட்ட எரிபொருட்களையும் இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்த நிலையை சமாளிக்க தங்களுடைய உற்பத்தி பொருட்களை மற்ற நாடுகளுக்கு விற்க ரஷ்யா முன்வந்துள்ளது. இதன் நீட்சியாக ரஷ்ய எண்ணெய் நிறுவனம் இந்திய நிறுவனங்களுடன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனினும், சர்வதேச நிதி கட்டமைப்பிலிருந்து ரஷ்யா தனித்த விடப்பட்டுள்ளதால் பணப் பரிவர்த்தனையில் சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.