புதுதில்லி:
2020 நவம்பர் 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவில் வேலைவாய்ப்பு விகிதம் 36.24 சதவிகிதமாக குறைந்துள்ளது.இதே காலத்தில், வேலையின்மை விகிதம்7.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.தனியார் நிறுவனமான இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy - CMIE) இதுதொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 4 வாரங்களாகவே தொழிலாளர் சந்தை சற்று தடுமாற்றத்தில் இருந்து வருகிறது. எனினும், பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் துவங்கிய கடந்த ஜூன் மாதத்திற்குப் பின், நவம்பர் 22 தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் வேலையின்மையும், வேலைவாய்ப்பு விகிதமும் மீண்டும் பின்னோக்கித் திரும்பியுள்ளது.நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் 5.5 சதவிகிதமாகவும், இரண்டாவது வாரத்தில் 7.2 சதவிகிதமாகவும் வேலையின்மை விகிதம் இருந்தது. அது தற்போது 7.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.மறுபுறத்தில் வேலைவாய்ப்பு விகிதமும் 36.24 சதவிகிதமாக குறைந்துள்ளது.
2019 - 2020ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு விகிதம் 39.4 சதவிகிதமாக இருந்தது. இது, பொதுமுடக்கத்தையொட்டி, 2020 ஏப்ரல் மாதத்தில் 27.2 சதவிகிதமாகவும், மே மாதத்தில்30.2 சதவிகிதமாகவும் சரிந்தது, பின்னர் அக்டோபரில் 37.8 சதவிகிதமாக உயர்ந்தது.ஆனால், தற்போது மீண்டும் குறையத் துவங்கியுள்ளது. நவம்பர் முதல் வாரத்தில் 37.5 சதவிகிதம், இரண்டாவது வாரத்தில் 37.4 சதவிகிதம் என்றிருந்த வேலைவாய்ப்பு விகிதம், தற்போது மூன்றாவது வாரத்தில் 36.24 சதவிகிதமாக குறைந்துள்ளது.இதன்மூலம் கொரோனா பொது முடக்கத்திற்கு முந்தைய நிலையை வேலைவாய்ப்பு எட்டவில்லை என்றும், அதற்கு செல்வதற்கு முன்பே மீண்டும் குறையத் துவங்கி இருப்பதாகவும் இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் கூறியுள்ளது.