districts

img

சிறுதாவூர் தலித் மக்கள் நிலங்கள் அபகரிப்பு! தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!

சிறுதாவூர் தலித் மக்கள் நிலங்கள் அபகரிப்பு விவகாரத்தில் நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன் பரிந்துரையை நடைமுறைப்படுத்திட வேண்டுமென தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயற்குழு அளித்துள்ள அறிக்கை வருமாறு:

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், சிறுதாவூர் கிராமத்தில் 20 தலித் மக்கள் குடும்பங்களுக்கு விவசாயம் செய்வதற்கும், வீட்டுமனை பயன்பாட்டிற்கும் 53 ஏக்கர் நிலம் 1967ம் ஆண்டு தமிழக அரசால் வழங்கப்பட்டது.

இந்த நிலங்கள் அனைத்தும் தனியார் ரிசார்ட் உரிமையாளர்கள் மற்றும் தனி நபர்களால் சட்டவிரோதமாகவும், மோசடியாகவும் அபகரிக்கப்பட்டன. இப்பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட தலித் மக்களை திரட்டி பல கட்ட போராட்டங்களை  நடத்தி வந்தது.

இதன் விளைவாக 2007ம் ஆண்டு நீதியரசர் கே.பி. சிவசுப்பிரமணியம் தலைமையிலான விசாரணை ஆணையத்தை அன்றைய முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் அமைத்தார். அந்த விசாரணை முடிவில் அபகரிக்கப்பட்ட தலித் மக்களின் நிலங்களையும், சிறுதாவூர் பங்களா வளாகத்தில் வளைக்கப்பட்ட 34 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களையும் கையகப்படுத்தப்பட வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உடனடியாக நிலத்தை பிரித்து வழங்க வேண்டுமெனவும் ஆணையம் பரிந்துரை செய்தது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் முடிவுற்றும் விசாரணை ஆணையத்தின் பரிந்துரை படி இதுநாள் வரை தலித் மக்களுக்கு உரிய நிலங்கள் பிரித்து வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தலித் மக்களுக்கு நிலங்களை வழங்கிட வலியுறுத்தி இன்று (31.07.2025) மீண்டும் சிறுதாவூரில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் பெ. சண்முகம் தலைமையில் நில மீட்பு போராட்டம் நடைபெற்றது. நியாயமான கோரிக்கையை ஏற்க மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் எவரும் கலந்து கொள்ளாமல் தாசில்தார் மட்டுமே கலந்து கொண்டு இப்பிரச்சனைக்கு எவ்வித தீர்வும் சொல்லாத காரணத்தினால் போராட்டத்தில் ஈடுபட்ட தலித் மக்கள், விவசாயிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தை வருவாய்த்துறை உருவாக்கியது. மாநில செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறை கைது செய்து அடைத்து வைத்துள்ளது. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவாமல் நிலத்தை சட்டவிரோதமாக அபகரித்து வைத்துள்ள தனியார் ரிசார்ட் உரிமையாளர்கள் மற்றும் மோசடி நபர்களுக்கு துணைபோகும் செயல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

எனவே, இனியும் காலதாமதம் செய்யாமல் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி கே.பி. சிவசுப்பிரமணியன் ஆணையத்தின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.