வேலூரில் ரூ.5 லட்சம் குட்கா பறிமுதல்
வேலூர், ஏப். 17- வேலூர் அருகே ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் விமான நிலைய சந்திப்பு தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விரிஞ்சிபுரம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேலூர் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 500 கிலோ எடையுள்ள ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் காரில் இருந்த 2 வடமாநில வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு குட்கா பொருட்கள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களை கைது செய்து, காருடன் குட்காவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதினா விலை கடும் சரிவு: விவசாயிகள் வேதனை
சூளகிரி, ஏப். 17- சூளகிரி பகுதியில் புதினா விலை கடும் சரிவடைந்ததை தொடர்ந்து விவசாயிகள் புதினாவை ஆற்றங்கரையோரம் வீசி சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டாரத்தில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் புதினா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு சாகுபடி செய்யப்படும் புதினா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்களுக்கும் லாரி, மினிலாரி உள்ளிட்ட வாகனங்களில் தினசரி அனுப்பப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2 மாதங்களாக புதினா விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சூளகிரி அடுத்த கனஜூர் பகுதி விவசாயிகள் கூறுகையில், புதினா விலை கடந்தத ஜனவரி மாத இறுதியில் இருந்து சரியத் தொடங்கியது. ஒரு ஏக்கரில் புதினா பயிரிட ரூ.2 ஆயிரம் செலவாகிறது. 90 நாட்களுக்குள் வளர்ந்து விளைச்சல் தரும் புதினாவுக்கு விலை இல்லாததால் செலவு செய்த பணம் கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. 200 புதினா கட்டுகள் அடங்கிய ஒரு மூட்டை 1,000 ரூபாய் வரை விற்ற நிலையில் தற்போது மூட்டை 100 ரூபாய்க்கு கூட விற்பதில்லை. ஆற்றங்கரையோரம் புதினாவை வாங்க வியாபாரிகள் வராததால் அறுவடைக்கு தயாரான புதினா நிலங்களில் வீணாகி வருவதை தடுக்க புதினா செடிகளை பறித்து ஆற்றங்கரையோரத்தில் கொட்டி வருகிறோம் என்றனர்.
மாவட்ட விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி
கடலூர், ஏப். 17- கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கடலூர் மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக் கொள்ளும் திட்டத்தை அறிவித்துள்ளது. அதனடிப்படையில் நீச்சல் பயிற்சி வகுப்பானது பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வரும் 19ஆம் தேதி முதல் நடத்தப்படவுள்ளது. 12 நாட்களுக்கான பயிற்சிக் கட்டணம் ரூ.1,416ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிற்சி கட்டணத்தை வங்கி அட்டைகள் மூலம் அலுவலகத்திலேயே செலுத்தலாம். கட்டணம் செலுத்த வரும்போது ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும். ஒருவருக்கு ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். நீச்சல் குளத்திற்கு திங்கட்கிழமை மட்டும் விடுமுறை. மகளிருக்கு காலை 9 மணி முதல் 10 மணி வரை தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் பெற மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்களை நேரடியாகவோ அல்லது 04142-220590, 7401703495 என்ற எண்ணிலொ தொடர்பு கொண்டு விவரங்கள் பெற்று பயன்பெறலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
24- ஆம் தேதி கிராம சபைக் கூட்டம்
சென்னை,ஏப்.17 கிராம சபைக் கூட்டம் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் என்று தமிழக ஊரக வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டங்கள் தொடர்பான விவரங்களை மத்திய அரசின் இணையதளத்தில் உள்ளீடு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது