districts

சிபிஎம் - மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி மானாமதுரை வைகை ஆற்றுக்குள் மணல் குவாரி ரத்து  

சிவகங்கை, மே 24-  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றுக்குள் மணல் குவாரி ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன் ரெட்டி அறிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.  மானாமதுரை வைகை ஆற்றுக்குள் இருந்து கடலாடி ,அருப்புக்கோட்டை, மதுரை, சிவகங்கை உட்பட பல ஊர்களுக்கு குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டவிரோதமாக பெருமளவில் மணல் அள்ளப்பட்டது. இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் முத்தூர் பகுதியில் விதிகளை மீறி மணல் அள்ளப்பட்டது. அந்த கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பெரும் போராட்டத்தை நடத்தி மணல் அள்ளுவது தடுத்து நிறுத்தப்பட்டது இதேபோன்று தெ. புதுக்கோட்டை பகுதியில் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இப்போராட்டத்திற்கு தலைமை வகித்து மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தியது. தற்போது மானாமதுரை அருகே வைகை ஆற்றில் மணல் அள்ள டெண்டர் விடப்பட்டது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் குழுவோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர், கோட்டாட்சியர், மானாமதுரை வட்டாட்சியர் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியாக மே மாதம் 23 ஆம் தேதி மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் மணல் அள்ளக்கூடாது என்றும் சிவகங்கை மாவட்ட வைகை ஆற்றை பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கை தொடர்பாக தமிழக அரசுக்கு எழுதி இறுதி தீர்வு காண்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை ரத்து செய்வதாக போராட்டக்குழு அறிவித்தது. கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற்பதாக வணிகர் சங்கத்தலைவர் அறிவித்திருந்தார்.கடை அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றதாக தலைவர் பாலகுருசாமி தெரிவித்தார்.

;