இந்திய தேசத்தை என்
பாதங்கள் அளந்திடணும்!
தென்றலில் நதிகளில் என்
கீதங்கள் கலந்திடணும்!
(இந்திய)
ஒவ்வொரு குடிசையிலும்
உட்கார்ந்து சாப்பிடணும்!
அண்ணன் தங்கை மாமன் என
முறை சொல்லிக் கூப்பிடணும்!
நாடோடிப் பாட்டுச் சத்தம்
நடமிடும் வயல்வெளியில்
ஊடாடும் சோகங்களை
உள்வாங்கி வெளிவிடணும்!
கஞ்சி தளும்பி வரும்
கலையத்தின் தாள லயம்
நெஞ்சில் எதிரொலித்து
இசையாய் வழிந்திடணும்!
(இந்திய)
கங்கை கரை நுரைகள்
காலுக்குச் சலங்கை கட்ட
துள்ளி வரும் வெள்ளி அலை
கன்னத்தில் மின்னல் வெட்ட
கோதுமைக்குப் பொன் நிறத்தை
கொடுக்கும் எமது குல
மாதர்கள் உழைத்திடுவார்!
மழலைகள் கண்ணுறங்கும்!
காட்டு மர நிழலிலே
கண்ணுறங்கும் மழலையர்க்கு
தொட்டிலாய் நான் மாறி
காற்றில் அசைந்திடணும்!
(இந்திய)
கண்ணீர் நிறைந்திருக்கும்
களஞ்சியங்கள்; அதில் நான்
புன்னகையை அள்ளி வந்து
கொட்டி வைத்து நிரப்பிடணும்!
மாண்டுவிட்ட வசந்தங்கள்
எத்தனையோ அத்தனையும்
மீண்டு வந்து தேசமிதன்
வீதிகளில் வலம் வரணும்!
நாடு செழித்திடணும்!
நல்ல மழை பெய்திடணும்!
புதிய இந்தியாவில்
பொற்காலம் பூத்திடணும்!
(இந்திய)