districts

காவல் துறையை ஏவி அபராதம் வசூலிக்கும் புதுவை அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை

புதுச்சேரி, அக். 17- பண்டிகை காலத்தில் காவல் துறையை ஏவி சோதனை என்ற பெயரில் அபராதம் விதிப்பதை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கொரோனா தாக்கத்தால் கடந்த 2 ஆண்டு காலமாக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்தது. தற்போதுதான் இயல்பு வாழ்க்கை ஓரளவு சீராகி வருகிறது. இந்தநிலையில், கடுமையான விலைவாசி உயர்வால் அன்றாடம் உழைக்கும் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு புதிதாக வேலை வாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பலரும் சுயமாக வங்கியில் கடன் வாங்கி ஆட்டோ மற்றும் இலகுரக வாக னங்களை ஓட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.   வாகனங்களின் உதிரி பாகங்கள் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் அன்றாடம் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தொழில் செய்து வரும் முறைசாரா தொழிலாளர்களின் வாழ்க்கை குறித்து புதுவை அரசு சிறிதும் கவலைப்படவில்லை. போக்குவரத்து காவல் துறையினர் சிக்னலுக்கு, சிக்னல் நின்றுக்கொண்டு போக்குவரத்தை சரிசெய்வதற்கு மாறாக, ரூ.200 முதல் ரூ.1000 வரை அபராதம் வசூலிக்கின்றனர். இந்த நடவடிக்கையை அரசும், காவல் துறையும் உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் அனைத்து பகுதி வாகன ஓட்டுநர்களை திரட்டி காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் அறிக்கை ஒன்றில் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.