districts

img

மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

மதுரை, டிச.18-  மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள (PHH) குடும்ப அட்டையினை, அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் கீழ் மாற்றித் தர கோரி மேலூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடியேறும் போராட்டம் கொட்டும் மழையிலும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மேலூர் வட்டாட்சியர் செந்தாமரை, வட்ட வழங்கல் அலுவலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோரிக்கை குறித்து மனுக்களாக பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மாற்றுத் திறனாளிகள் வட்டாட்சியரிடம் 400 மனுக்களை வழங்கினர்.  இதனை தொடர்ந்து வட்டாட்சியர் ஒரு மாத காலத்திற்குள் கார்டை மாற்றி தர நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.  போராட்டத்திற்கு மேலூர் ஒன்றியச் செயலாளர் எம்.ராஜா, கொட்டாம்பட்டி ஒன்றியச் செயலாளர் ஆர்.அறிவழகன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாற்றுத்திறனாளிகள் மேடையின் அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன், மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் கே.தவமணி, மாவட்டச் செயலாளர் இன்.ஈ.வீ.முருகன், மாவட்டப் பொருளாளர் கே.சின்னக்கருப்பன், மேலூர் ஒன்றியத் தலைவர் எஸ்.கண்ணன், கொட்டாம்பட்டி ஒன்றியத் தலைவர் ஏ.புரோஸ்கான், கொட்டாம்பட்டி ஒன்றியத் தலைவர் மேலூர் ஒன்றியத் துணைத் தலைவர் பி.எஸ்.ராஜாமணி, கொட்டாம்பட்டி ஒன்றியப் பொருளாளர் சி.நண்பர், மேலூர் ஒன்றியப் பொருளாளர் சுமதி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சியின் மேலூர்  தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பி.மணவாளன், தாலுகா குழு உறுப்பினர்கள் கே.ஆனந்த், ஏ.தனசேகரன், விவசாயிகள் சங்க தாலுகாச் செயலாளர் ஏ.ராஜேஸ்வரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.