districts

img

குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் மழை : திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்

நாகர்கோவில், ஏப்.22- கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை வெயில் காரணமாக பல்வேறு பகுதிகளில் ஆறு, குளங்கள் வறண்டு நீர் வற்றிப்போகும் நிலையில் உள்ளன. அதே வேளையில் அவ்வப்போது பரவலாக லேசான மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் ஓரளவு பலத்த மழை பெய்து வருவதால் குடிநீர் தட்டுப் பாடு ஏற்படாது என்கிற நம்பிக்கை அளித்துள்ளது.  

இந்நிலையில் ஏப்ரல் 21 ஞாயிறன்று பிற்பக லில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றார்  அணைப் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதே போல மலையோர பகுதிகளான ஆறு காணி,   கடையாலுமூடு, களியல், நெட்டா  மணலோடை, திருவரம்பு உள்ளிட்ட இடங்களிலும் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்துள்ளது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அத்துடன் அணை களுக்கும் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது.

கோடை வெயில் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து குறைந்து  காணப்பட்டது. ஞாயிறன்று பெய்த மழையால் அருவியில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதனால் அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குளித்தும், நீர் வீழ்ச்சியின் அழகை ரசித்தும் உற்சாகமடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏப்ரல் 22 திங்களன்று காலை 8 மணி வரையான 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு: பூதப்பாண்டி 10.4, சிற்றார்- (I) 7.2, பேச்சிப் பாறை 21.6, பெருஞ்சாணி 5.4, புத்தன் அணை  6.8, சிவலோகம் (சிற்றார்- II) 4.8, சுருளகோடு  5, தக்கலை 5.8, பாலமோர் 8.6, மாம்பழத் துறையாறு 12, திற்பரப்பு 41.2, ஆரல்வாய்மொழி, அடையாமடை 2, ஆனைகிடங்கு 11.2, முக்கடல் அணை 12 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

அணைகளில் நீர்மட்டம்

(அடைப்புக்குறிக்குள் அணையின் உயரம்) சிற்றார் I (18) 9.28  அடி, சிற்றார் II (18) 9.38 அடி, பேச்சிப்பாறை (48) 42.75 அடி, நீர் வரத்து விநாடிக்கு 368 கன அடி, பெருஞ்சாணி (77) 47.65 அடி, நீர் வரத்து விநாடிக்கு 43 கன அடி,  நீர் வெளியேற்றம் 21 கன அடி, பொய்கை (42.65)  16.10 அடி, மாம்பழத்துறையாறு (54.12) 18.86 அடி, முக்கடல் அணை (25) 6.50 அடி, நீர் வெளியேற்றம் 8.6 கன அடி.

;