நாகர்கோவில், ஜுன் 22- குமரி மாவடடம் நல்லூர், உண்ணாமலைக்கடை, திருவட்டார் உள்ளிட்ட பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைப்பணியினை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் செவ்வாயன்று (ஜுன் 21)துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட ஐரேனிபுரம் சானல் முக்கு முதல் ஓந்தோனி சாலை வரை நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.54 இலட்சம் மதிப்பில் சாலைப்பணியும், உண்ணாமலைக்கடை பேரூராட்சிக்குட்பட்ட குன்னம்பாறை முதல் தாமரைகுளம் வரை நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.54.5 இலட்சம் மதிப்பில் நடைபெறும் சாலைப்பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், திருவட்டார் பேரூராட்சிக்குட்பட்ட பாலாங்கோணம் முதல் திருவரம்பு சாலை வரை நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.54 இலட்சம் மதிப்பில் நடைபெறவுள்ள சாலைப்பணிகள் என மொத்தம் ரூ.1.62 கோடி மதிப்பிலான சாலைப்பணிகளை துவக்கி வைத்துள்ளதோடு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகளை விரைந்து முடிக்கவும் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். நிகழ்ச்சியில் செயல் அலுவலர்கள் கணேஷ் (நல்லூர்), பிரதாபன் (உண்ணாமலைக்கடை) , மகாராஜன் (திருவட்டார்), பேரூராட்சி தலைவர்கள் வளர்மதி (நல்லூர்), பமலா (உண்ணாமலைக்கடை), பெனிலா ரமேஷ் (திருவட்டார்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.