districts

img

2 நாட்களில் குமரிக் கடல் 8 உயிர்களை விழுங்கியது

நாகர்கோவில், மே 6- கன்னியாகுமரி மாவட்டம் லெமூர் கடற்கரையில் அலையில் கால் நனைக்க முயன்ற 5 பயிற்சி மருத்துவர்கள் கடலுக்குள் மூழ்கி உயிரிழந்தனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் குமரி மாவட்ட கடல் சீற்றத்துக்கு 8 மனித உயிர்கள் பலியாகி உள்ளன.  

நாகர்கோவில் பறக்கையை சேர்ந்தவர் சர்வதர்ஷித். இவர் திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் படித்து பயிற்சி மருத்துவராக உள்ளார். இவருடன் திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன் ஷாம் மற்றும் வெங்கடேஷ், காயத்ரி, சாருகவி, நேசி ஆகிய 6 பேரும் ஞாயிறன்று அங்கிருந்து கார் மூலமாக நாகர்கோவிலில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தனர். ஞாயிறன்று இரவு நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்த இவர்கள் இங்கு தங்கினார்கள்.

திங்களன்று காலை திற்பரப்பு அருவிக்கு செல்வதற்காக 6 பேரும் காரில் புறப்பட்டு சென்றனர். திற்பரப்பு அருவியில் தண்ணீர் குறைவான அளவில் கொட்டியது. இதையடுத்து 6 பேரும் அங்கிருந்து புறப்பட்டு ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரை பகுதிக்கு வந்தனர். கடற்கரை பகுதியில் கால் நனைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வந்த ராட்சத அலை 6 பேரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதை பார்த்த மீனவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர்.

இதில்  சர்வ தர்ஷித், நேசி இருவரையும் மீட்டனர். மற்ற நால்வரையும் மீட்க முடியவில்லை. அவர்களது உடல்கள் பிணமாக கரை ஒதுங்கின. இதற்கிடையில் மீட்கப்பட்ட 2 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சர்வதர்ஷித் பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 5 ஆனது. சுற்றுலா வந்த இடத்தில் 5 பயிற்சி மருத்துவர்கள் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. லெமூர் கடற்கரை ஆபத்தான பகுதி என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும், உயிர்பயமின்றி செல்வோரை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற ‘கள்ளக்கடல்’ நிகழும்போது கூடுதல் காவல்துறையினர் நியமிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.   குமரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கடல் சீற்றமாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் குளச்சல் கோடிமுனை பகுதியில் சனியன்று கடல் அலையில் சிக்கி சென்னையை சேர்ந்த 2 பேர் பலியானார்கள்.

தேங்காய்பட்டினம் பகுதியில் தந்தையுடன் வந்திருந்த சிறுமி ஆதிரா (7) என்பவரை கடல் அலை இழுத்துச் சென்றது. அவரது உடலை ஞாயிறன்று காலை மீனவர்கள் மீட்டனர். இரண்டு நாட்களில் கடல் அலையில் சிக்கி குமரி மாவட்டத்தில் 8 பேர் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

;