districts

img

ஆற்றங்கரைகளில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவாரூர், ஜூலை 8 -  திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலைகளின் அருகேயுள்ள ஆற்றங்கரைப் பகுதிகளில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.  குறிப்பாக திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் சாலையில் விளமல் அருகில், இடதுபுறம் புதர்கள் அடர்ந்த பகுதி, நன்னிலத்தையடுத்த கொல்லுமாங்குடி ரயில்வே கேட் அருகில் உள்ள பகுதி, மாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகிலுள்ள பகுதி உட்பட பல இடங்களிலும் இதேநிலை நிலவுகிறது.  இப்பகுதிகளைக் கடக்கும் போது மூச்சுவிட சிரமப்படும் வகையில் துர்நாற்றம் வீசுகிறது. ஆற்றில் தண்ணீர் ஓடும் காலத்தில் மீன்களுக்கு உணவாக பயன்படுவதாலும் நீரில் அடித்துச் செல்லப்படுவதாலும் இதன் துர்நாற்றம் தெரிவதில்லை. ஆனால் வெயில் காலங்களில் சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் மூச்சுவிட திணறுகின்றனர். பெரிய அளவிலான இறைச்சிக் கடைகள் மட்டுமல்லாது, சில சிறிய கடைகள் மூலமும் இறைச்சி விற்பனை வாரம் முழுவதும் நடைபெறுகிறது. ஆனால் இக்கடைகளிலிருந்து கழிவுகளை அப்புறப்படுத்த முறையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என தெரியவில்லை. பெரும் நோய்த்தொற்றுகள் பரவி வருகிற இந்தக் காலத்தில், மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் இறைச்சிக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவதற்கான விழிப்புணர்வையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் உள்ளாட்சி அளவில் குழு அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும். அத்தகைய நடைமுறைகள் வியாபாரிகளுக்கு கூடுதல் செலவினங்களை ஏற்படுத்தாமலும் இருக்க வேண்டும். அரசு தரப்பு, வியாபாரிகள், நுகர்வோர் அனைவரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே சரியானத் தீர்வை எட்ட முடியும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

;