விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகத்தினர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடை பயணம் மேற்கொள்வதை வரவேற்று பதாகை வைத்துள்ளனர். எனவே, அப்பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டு பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று வருகிறார்.
இந்நிலையில், கடந்த செப்.,5ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் நடைபயணத்தை முடித்து விட்டு இராஜபாளையத்திற்கு வந்துள்ளார். செப்.,6 அன்று மாலை பெரிய மாரியம்மன் கோவில் பகுதியிலிருந்து தனது யாத்திரையை துவக்கி பஞ்சு மார்க்கெட்டில் நிறைவு செய்வதாக பாஜக தரப்பில் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலையை வரவேற்று இராஜபாளையத்தில் பதாகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அங்குள்ள பொது மக்கள் பலர் அதிர்ச்சியடைந்தனர். அதற்கான காரணம் என்னவெனில், ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளி சார்பில் அந்த பதாகை வைக்கப்பட்டிருந்தது. இது அரசு உதவி பெறும் பள்ளியாகும்.
தமிழ்நாடு அரசின் உதவியைப் பெற்று இயங்கி வரும் இப்பள்ளி நிர்வாகமானது, எப்படி, சமூக நீதிக்கு எதிராக, சனாதானத்தை உயர்த்திப் பிடித்து வரும் கொள்கையை அடிப்படையாக கொண்ட பாஜக மாநிலத் தலைவரை வரவnற்று பதாகை வைக்கலாம் என பொது மக்கள் பெரும் ஆத்திரமடைந்தனர்.
இதையடுத்து, அந்த பதாகையின் புகைப்படத்தை எடுத்து பலர் தங்களது முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். இதனால் ஏராளமானோர் அப்பள்ளி நிர்வாகத்தின் மோசமான இச்செயலை கண்டித்து பலர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டனர்.
அதன் பிறகு, காவல்துறையினருக்கும், வருவாய்த்துறையினருக்கும் புகார்கள் செய்யப்பட்டன. பின்பு, பள்ளி நிர்வாகத்தை அரசு தரப்பில் எச்சரித்த பின்பு, அந்த பதாகையை பள்ளி நிர்வாகம் அகற்றியுள்ளது.
ஆனால், அதை பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் பார்க்கும் வகையில் பள்ளி வளாகத்தின் முன் பகுதியில் வைத்துக் கொண்டு தங்களது நப்பாசையை தீர்த்துக் கொண்டனர்.
இதே பள்ளியில் கடந்த காலங்களில், மதவெறி பிடித்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சாகா நிகழ்ச்சியை நடத்துவதற்கு பள்ளி நிர்வாகத்தினர்அனுமதி வழங்கியுள்ளனர். அப்போதும் பொது மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அப்போதையை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென கூறப்படுகிறது.
எனவே, தமிழக அரசும், விருதுநகர் மாவட்ட நிர்வாகமும், அரசு உதவி பெறும் பள்ளியான ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.