districts

img

ஒன்றிய அரசின் தொழிலாளர்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து நாடு தழுவிய வேலைநிறுத்தம் போராட்டம்: டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கைது

திருவாரூர், மார்ச் 28 - நாடு தழுவிய அளவிலான பொது வேலைநிறுத்தப் போராட்டம் தமிழகத்தில் மாபெரும் வெற்றியடைந்தது. பெரும்பாலான பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை.  ஒன்றிய அரசு தொழிலாளர் நலச் சட்டங்களை தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றியதைத் திரும்பப் பெற வேண்டும். வேளாண் சட்டங்களை ரத்து செய்த போதும், விவசாயிகளின் இதரக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். தனியார்மயத்தை ஊக்குவிக்கும் தேசிய பணமாக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அங்கன்வாடி, மதிய உணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும். சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மார்ச் 28, 29 தேதிகளில் தொழிற்சங்கங்களின் சார்பில் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. திருவாரூரில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற சாலை மறியல் போராட்டம் தஞ்சை சாலை மேம்பாலத்தில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் தலைமையேற்றார். சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ஆர்.சந்திரசேகர ஆசாத், தொமுச தலைவர் வி.குருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்க மாநில செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எம்.கலைமணி, மாவட்ட செயலாளர் குமாரராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்திய மாணவர் சங்கம்
திருவிக கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து நடைபெற்ற போராட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் ம.முருகன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கியும், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மாநில செயலாளர் வீ.மாரியப்பன் பேசினார். மாவட்ட செயலாளர் இரா.ஹரிசுர்ஜித் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி 
திருத்துறைப்பூண்டி ஒன்றிய-நகர குழு அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாநில தலைவர் வி.சுப்பிரமணியன், சிஐடியு மாவட்ட தலைவர் இரா.மாலதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.ஜோதிபாசு, கே.ஜி.ரகுராமன், ஒன்றிய செயலாளர்கள் டி.வி.காரல்மார்க்ஸ், வி.டி.கதிரேசன், சிபிஐ சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி
மன்னார்குடி பேருந்து நிலையத்தின் நான்கு வாயில்களிலும் மத்திய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் ஜி.ரெகுபதி, எம்.மகாதேவன், வி.கலைச்செல்வன், எஸ்.பாண்டியன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு இணைப்பு சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

நன்னிலம்
திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, பேரளம் ஆகிய நான்கு மையங்களில் மறியல் நடைபெற்றது. நன்னிலம் ஒன்றியம் பேரளம் கடைவீதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்திர்க்கு சிஐடியு மாவட்ட துணை செயலாளர் எஸ்.வைத்தியநாதன் தலைமை வகித்தார். கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் பி.இப்ரகிம்சேட், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வி.தவமணி மற்றும் ஏஐடியுசி மாவட்ட பொறுப்பாளர் கே.ராஜா முன்னிலை வகித்தனர்.  இதேபோல் நன்னிலம், குடவாசல், வலங்கைமான், கொரடாச்சேரி ஆகிய ஒன்றியங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

திருச்சிராப்பள்ளி
திருச்சியில் சிஐடியு, எல்பிஎப், ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியு, எல்டியுசி, எல்எல்எப் ஆகிய அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் திங்களன்று திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர்கள் சிஐடியு ரெங்கராஜன், எல்பிஎப் ஜோசப்நிக்சன், ஏஐடியுசி சுரேஷ், ஏஐசிசிடியு தேசிகன், எச்எம்எஸ் ராஜமாணிக்கம், ஐஎன்டியுசி வெங்கட்நாராயணன், எல்டியுசி கார்த்திகேயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட தலைவர் பால்பாண்டியன் ஆகியோர் பேசினர். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக ரயில்வே ஜங்சன் வந்த அனைத்து தொழிற்சங்கத்தினரை போலீசார் போரிகார்டு மற்றும் கயிறு கட்டி தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தென்னூரில் உள்ள மின்வாரிய திருச்சி மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி அனைத்து சங்க நிர்வாகிகள் பேசினர். பொன்மலை ஆர்மரி கேட் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு டிஆர்இயு கோட்ட தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார்.

மண்ணச்சநல்லூர் எதுமலை பிரிவு சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிஐடியு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். தா.பேட்டை கடைவீதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு புறநகர் மாவட்ட பொருளாளர் சம்பத், திருவெறும்பூர் போராட்டத்திற்கு சிஐடியு புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் முகமதுஅலி, சிபிஎம் தாலுகா செயலாளர் மல்லிகா உள்பட பலர் பங்கேற்றனர். மணப்பாறை ஒன்றியம் மருங்காபுரி வட்டம் துவரங்குறிச்சியில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நடராஜன் தலைமை வகித்தார். சிபிஎம் வட்ட செயலாளர் தியாகராஜன், சிஐடியு துணைசெயலாளர் சண்முகம் மற்றும் முசிறியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பழனிசாமி உள்பட பலரும் பங்கேற்றனர். உப்பிலியபுரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமநாதன், புள்ளம்பாடி போராட்டத்தில் கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் பூமாலை, துறையூரில் தரைக்கடை சங்க நிர்வாகி சங்கிலிதுரை உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். லால்குடி ரவுண்டானா அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் பாலு தலைமை வகித்தார்.

விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சந்திரன், சிபிஎம் லால்குடி ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் பங்கேற்றனர். மணப்பாறை போராட்டத்திற்கு சிபிஎம் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் தலைமை வகித்தனர். வையம்பட்டியில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க புறநகர் மாவட்ட செயலாளர் சிதம்பரம் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் என்.வெள்ளைச்சாமி, விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், அதிகாரிகள் சங்கம் மற்றும் முகவர்கள் சங்கம் சார்பில் திருச்சியில் நடைபெற்ற போராட்டத்திற்கு காப்பீட்டு கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்ட துணைத் தலைவர் ஜோன்ஸ் தலைமை வகித்தார்.

மயிலாடுதுறை 
மயிலாடுதுறையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது. கேணிகரை பெரியார் சிலை அருகிலிருந்து அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து பேரணியாக புறப்பட்டு திருவாரூர் சாலை, கச்சேரி சாலை வழியாக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு கிட்டப்பா அங்காடி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொமுச பொன்.நக்கீரன், சிஐடியு மாவட்ட செயலாளர் ரெ.ரவீந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  திருக்கடையூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பரமசிவம் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், ஒன்றிய செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், விவசாயிக சங்க ஒன்றிய செயலாளர் சந்திரமோகன், ஒன்றிய தலைவர் ஜி.இளையராஜா, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சாமிதுரை ஆகியோர் கண்டன உரையாற்றினர். செம்பனார்கோவில் ஒன்றியம், ஆக்கூர் முக்கூட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் காபிரியேல் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் வீ.எம். சரவணன், ஒன்றிய தலைவர் ஜி.கருணாநிதி, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் யூ.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிக்கல், கீழ்வேளூர், தலைஞாயிறு, கீழையூர், நாகை நகரம், திருமருகல், தாணிக்கோட்டகம், பாப்பாகோவில், கரியாப்பட்டினம், சாட்டியக்குடி, திருப்பூண்டி, ஆகிய இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சிக்கலில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமணி, விதொச மாநிலக் குழு உறுப்பினர் எ.மீரா, விச ஒன்றிய செயலாளர் ஏ.கே.குமார், வி.ச. மாவட்ட செயலாளர் கோவை.சுப்பிரமணியன், விதொச மாவட்டச் செயலாளர் எம்.முருகையன், ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் என்.வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேதாரண்யம்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம், தாணிக்கோட்டகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்க செயலாளர் கோவை சுப்ரமணியம், வேதை வடக்கு ஒன்றியச் செயலாளர் வெற்றியழகன், வேதை தெற்கு ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.கே.பாண்டியன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.அம்பிகாபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தலைஞாயிறு ஒன்றியம் கௌப்பாடு கடைத்தெருவில் நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஏ.வேணு தலைமை வகித்தார்.

கும்பகோணம்
கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து தொழிலாளர் சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு தொமுச மாடாகுடி செல்வராஜ், ஏஐடியுசி தில்லைவனம், சிஐடியு கண்ணன், ஐஎன்டியுசி செல்வராஜ், ஏஐசிசிடியு கண்ணையன், ஏஎல்எல் மதியழகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

திருப்பனந்தாள் 
திருப்பனந்தாள் கடைவீதியில் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் சா.ஜீவபாரதி ஒன்றிய செயலாளர் டி.ஜி.ராஜேந்திரன், மாணவர் சங்க மாநில செயலாளர் அரவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேவனாஞ்சேரியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். திருவிடைமருதூரில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு கூட்டுறவு தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றிய செயலாளர் நாகேந்திரன், ஐஎன்டியுசி துளசி, விசிக சிவனேசன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணை தலைவர் சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மின்வாரிய ஊழியர்கள்
கும்பகோணம் மின்வாரிய அலுவலகம் முன்பு அனைத்து தொழிலாளர் சங்க கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்ட பொருளாளர் சேரலாதன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் காணிக்கைராஜ், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியூசி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, தொமுச மாவட்டத் தலைவர் கணபதி, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் கே.ஆர்.தர்மராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில் சிபிஐ மாவட்டச் செயலாளர் மு.மாதவன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், தொமுச மாவட்டச் செயலாளர் ரெத்தினம், விதொச மாநில பொருளாளர் எஸ்.சங்கர், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில பொருளாளர் எஸ்.தேவமணி மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டையில் நடைபெற்ற மறியல் பேராட்டத்திற்கு வி.ச மாவட்டத தலைவர் ஏ.ராமையன், சித்திரைவேல், நாகராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி.நடராஜன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அறந்தாங்கி
அறந்தாங்கியில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, பெரியசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆலங்குடியில் நடைபெற்ற மறியலில் சிபிஐ(எம்எல்) மாவட்டச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி, எஸ்.சுந்தர்ராஜன், ஏ.ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் முன்னாள் மாவட்டச் செயலாளர் பெரி.குமாரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொன்னமராவதி
பொன்னமராவதியில் விதொச மாவட்டப் பொருளாளர் கே.சண்முகம். விதொச மாவட்டச் செயலாளர் ஏ.எல்.ராசு ஆகியோர் தலைமை வகித்தனர். கறம்பக்குடியில் வி.ச மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி தலைமை வகித்தார். கீரமங்கலத்தில் சிபிஐ முன்னாள் மாவட்டச் செயலாளர் த.செங்ககோடன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் த.அன்பழகன் ஆகியோர் தலைமை வகித்தனர். கீரனூரில் வி.ச மாவட்ட துணைத் தலைவர் எஸ்.பீமராஜ், விதொச மாநிலக்குழு உறுப்பினர் எம்.சண்முகம், சிதம்பரம் ஆகியோர் தலைமை வகித்தனர்.  அன்னவாசலில் எம்.ஜோஷி, ஆர்.சி.ரெங்கசாமி, என்.விஜயரெங்கன், பழனியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். அரிமளத்தில் சிஐடியு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஆர்.வி.ராமையா தலைமை வகித்தார். மணமேல்குடியில் கரு.ராமநாதன் தலைமை வகித்தார். ஆவுடையார்கோவிலில் விச மாவட்டப் பொருளாளர் சி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். திருமயத்தில் சிஐடியு நிர்வாகி குரியன் தலைமை வகித்தார்.

எல்ஐசி ஊழியர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை எல்ஐசி காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் செயலாளர் வீரப்பன் தலைமையில் கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள் வேலை புறக்கணிப்பு செய்தனர். பின்னர் அலுவலக வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் கவிவர்மன் கண்டன உரையாற்றினார்.

கரூர்
கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற மாபெரும் சாலை மறியல் போராட்டத்திற்கு எல்பிஎப் சங்க மாவட்ட தலைவர் வி.ஆர்.அண்ணாவேலு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பழ.அப்பாசாமி, சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் சி.முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.கந்தசாமி உள்ளிட்ட பலர் உரையாற்றினர். 

ஆசிரியர் கூட்டமைப்பு
ஆசிரியர் ஊழியர் சங்க கூட்டமைப்பினர் கரூர் மாவட்டக்குழு சார்பில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.  காப்பீட்டு கழக ஊழியர்கள் காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் கரூர் கிளைகளின் சார்பில் எல்ஐசி கிளை அலுவலகம் இரண்டு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் தஞ்சை கோட்ட துணைத் தலைவர் வி.கணேசன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம், கே.வி.பி. வங்கி ஊழியர் சங்க அகில இந்திய பொது செயலாளர் ஐ.வெங்கடேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.  இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

;