திருவண்ணாமலை, ஏப்.10 - சிறுபான்மையின பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் வழங்க வேண்டும் என்று தையல் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட தையல் கலை தொழிலாளர் சங்கத்தின் ஆண்டு பேரவை வந்தவாசி அடுத்த சென்னவரம் கிராமத்தில் நடைபெற்றது. இதில், அரசு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை தைத்துக் கொடுத்து வரும் திருவண்ணாமலை மகளிர் தையல் கூட்டுறவு சங்கம் மற்றும் வந்தவாசியில் உள்ள அன்னை சத்யா மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தில் விண்ணப்பித்தவர்களை உடனடியாக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை நலத்துறை, இஸ்லாமியர், கிறித்துவர், மற்றும் ஜெயின் சிறுபான்மையினர், இலவச தையல் இயந்திரம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக தையல் இயந்திரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கு ஜீனத் தலைமை தாங்கினார். கதிஜா வரவேற்றார். பொதுச்செயலாளர் எம்.வீரபத்திரன், அப்துல்காதர், ரகமத்துல்லா உள்ளிட்டோர் பேசினர். கமருண்ஸா நன்றி கூறினார்.