districts

img

முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக

திருமுருகன்பூண்டி நகராட்சியில் முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கிய அரசு அதிகாரிகள் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன் வலியுறுத்தியுள்ளார்.
திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிகளில் முறைகேடான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருமுருகன்பூண்டி நகர்மன்ற 10 ஆவது வார்டு உறுப்பினர் சுப்பிரமணியம், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு மன்ற நடுவனுக்கு புகார் மனு அளித்தார். இம்மனு மீது விசாரணைக்கு சுப்பிரமணியத்துடன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் வெங்கடாசலம், 14 ஆவது வார்டு உறுப்பினர் தேவராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் சென்றனர். அதேபோல எதிர்மனுதாரராக திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையர் , கணக்கர் ராஜகோபால் உட்பட அரசுத்துறை அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்தனர். இந்த விசாரணை முடிவில் முறைகேடான குடிநீர் இணைப்பு வழங்கிய பிளம்பர், அரசு அதிகாரிகள், செயல் அலுவலர், இதற்கு துறை நின்ற முன்னாள் கவுன்சிலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுமாறு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருமுருகன்பூண்டி பேரூராட்சியாக இருந்த காலத்தில் 10 ஆண்டுகளில் 8 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள், வழங்கப்பட்டிருந்தன. அதேபோல ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட முறைகேடான குடிநீர் இணைப்புகளும் வழங்கப்பட்டன. அன்றைய காலகட்டத்தில் அதிகாரத்திலிருந்து அதிமுக பேரூராட்சி ஒப்புதலோடு குறிப்பிட்ட சில நபர்களுக்கு மட்டும் குடிநீர் இணைப்பு வழங்கியது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி இடைவிடாமல் மாவட்ட ஆட்சியரை சந்திப்பது, போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது. அதன்தொடர்ச்சியாக சமீபத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு நடுவண் மன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது. அம்மனுவின் மீதான விசாரணையின்போது மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வழங்கப்பட்டிருந்த ஆவணங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆவணங்கள் அடிப்படையில் நடுவன் மன்றம், முறைகேடான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதை துண்டிப்பது, இல்லாவிட்டால் இரண்டு மடங்கு அபராதத்தொகை விதிப்பது என உத்தரவிடப்பட்டது.
அதன்படி, ஏறத்தாழ 10 ஆண்டுகளில் 5 பேரூராட்சி செயல் அலுவலர்கள் இங்கிருந்துள்ளனர். 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு பணியாற்றிய பேரூராட்சி செயல் அலுவலர்கள் முறைகேடான குடிநீர் இணைப்பு வழங்குவதில் துணை நின்றுள்ளனர். இறுதியாக நடைபெற்ற ஆய்வில், 800க்கும் மேற்பட்ட முறைகேடான குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டது. இதற்கு அபராதத்தொகையாக  ஒரு குடிநீர் இணைப்புக்கு 27 ஆயிரம் ரூபாய் விதித்துள்ளனர். இதன்மூலம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு 2 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. எனவே, முறைகேடான குடிநீர் இணைப்பு வழங்குவதில் துணை நின்ற அனைவரின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், திருமுருகன்பூண்டி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு பெரும்பாலும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் தற்போது வரை நியமிக்கப்படவில்லை. இதில், உள்ளாட்சித்துறை அமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், என்றார்.
மேலும், பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள மண்டல நிர்வாக நகராட்சி ஆணையர், மூன்று மாதத்திற்குள் கள ஆய்வு செய்து, முறைகேடான குடிநீர் இணைப்பு குறித்த அறிக்கையை நடுவன் மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு மாதம் கடந்த நிலையிலும் கூட கள ஆய்வுக்கு வரவில்லை. எனவே, இருக்கக்கூடிய இரண்டு மாதத்தில் உடனடியாக கள ஆய்வு செய்து, அறிக்கையை நடுவன் மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் குடிநீர் இணைப்பு சென்றடையும், என்றார்.
நகராட்சியில் பணியாற்றும் டேங்க் ஆபரேட்டர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட பிறகும், தற்போது வரை இதனை அமல்படுத்தப்படுத்தாதது கண்டனத்திற்குரியது ஆகும்.  திருமுருகன்பூண்டி நகராட்சியில்  சொத்து வரி விதிக்க நோட்டீஸ் வழங்க உரிய ஏற்பாடு இல்லை. அதேபோல வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் நிதிக்கு தட்டு தடுமாறுகின்ற சூழ்நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு திருமுருகன்பூண்டி நகராட்சியில் இருந்து நிதி ஒதுக்குவதை நிறுத்த வேண்டும். கிராமசபை போல நகர சபை நடைமுறைக்கு வர வேண்டும், என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளரங்கு கூட்டத்தில் குறிப்பிட்ட தலைப்பில் பேசியுள்ளார். பொதுவெளியில் யாரையும் எவரையும் பேசவில்லை, ஒட்டுமொத்த பொருளாதார பின்னடைவை மறைப்பதற்கு இப்பிரச்சனையை  கையில் எடுத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் ஆ.ராசாவை கண்டித்து கடை அடைப்பு அறிவித்திருப்பது என்பது தேவையற்ற செயலாகும்.
பனியன் உற்பத்தி சார்ந்த மூலப்பொருட்கள் என்பது 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில் மின் கட்டணமும் உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பு என்பது கடுமையாக குறைந்து வருகிறது. பருத்தி உற்பத்தி என்பது கடுமையாக பாதித்துள்ளது. இதில், ஒட்டுமொத்தமாக பாதிப்பது யாரென்றால் தொழிலாளிகள்தான். தமிழ்நாட்டைச் சார்ந்த தொழிலாளர்கள் திருப்பூரை விட்டு வெளியே செல்கின்றனர். இத்தகைய சூழலில் மின்கட்டண உயர்வு என்பது தொழிலை மிகவும் பாதிக்கும் என ஏற்றுமதியாளர் சங்கத்தினர் கூறியுள்ளார். எனவே, மின்கட்டன உயர்வை கண்டித்து செப்.20 ஆம் தேதி ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவிக்கிறோம், என்றார்.
முன்னதாக, இப்பேட்டியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, திருமுருகன்பூண்டி நகராட்சி உறுப்பினர்கள் சுப்பிரமணியம், தேவராஜன், பார்வதி சிவகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் ஆகியோ உடனிருந்தனர்.

;