தஞ்சாவூர், ஏப்.20- தஞ்சாவூர் பெரியகோவிலில் (பெருவுடையார் – பெரியநாயகி அம்மன் கோவில்), கடந்த ஏப்.6 அன்று சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி சனிக்கிழமை காலை 5:30 மணிக்கு தியாகராஜர், கமலாம்பாள், சோமஸ்கந்தர், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் சுவாமிகள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு தேரடிக்கு வரப்பட்டது. பிறகு, தியாகராஜர் – கமலாம்பாள் தேரில் எழுந்தருள, காலை 7 மணியளவில் தேரோட்டத்தை ஆட்சியர் தீபத் ஜேக்கப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, சூரியனார்கோவில் ஆதீனம் ஸ்ரீ காரியம் சுவாமிநாத சுவாமி தேசிக சுவாமிகள், அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், உதவி ஆணையர் கோ.கவிதா, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பிறகு ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் 14 நிலைகளில் நிறுத்தப்பட்டு மீண்டும் மதியம் 12:45 தேர் நிலைக்கு வந்தது. இந்நிலையில், தேரோட்டம் துவங்கியபோதே அலங்கார பந்தல் வலது புறத்தில் உள்ள கடையின் பெயர் பலகையில் சிக்கியது. இதனால், தேர் புறப்படுவதில் 15 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. பிறகு, கொங்கனேஸ்வரர் கோவில் அருகே தேர் சென்றபோது, வலது புற மின் கம்பத்தில் தேர் அலங்கார தொம்பைகள் சிக்கியது. இடையூறாக இருந்த மின் கம்பி அகற்றப்பட்ட பிறகு தேர் புறப்பட்டது. இருப்பினும், அடுத்த 50 அடி தொலைவில் வலது புற மின்கம்பத்தில் தேரின் அலங்கார தொம்பைகள் இரண்டு இடங்களில் சிக்கின. தொடர்ந்து கோவில் பணியாளர்கள் அந்த தொம்பைகள், அலங்காரம் செய்யப்பட்ட கட்டைகளை அகற்றி தேரின் அளவை குறைந்தனர். இதனால் தேரோட்டம் தாமதமாகியது. இதற்கிடையில் மின்கம்பத்தில் சிக்கிய தொம்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் வெங்கடேஷனின் (34) தலையில் இரும்பு கம்பி தாக்கியதில் அவர் காயமடைந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரணம் என்ன...? வழக்கமாக தேர் அலங்காரமானது சுமார் 21 அடி அகலம், 60 அடி உயரம் இருக்கும். ஆனால் இம்முறை அரண்மனை தேவஸ்தானம், அறநிலையத்துறை அதிகாரிகள் தேர் அலங்கார வடிவத்தை மாற்றி, தேரின் இருபுறம் கூடுதலாக ஒன்றரை அடி அகலத்தை மாற்றியதால், தேர் தொம்பைகள் மின்கம்பங்களில் சிக்கின. அத்துடன், தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மின்கம்பங்கள் சாலையோரங்களில் முறையாக அமைக்கப்படாமல் உள்ளன. அத்துடன் தேரோடும் வீதிகளில் முறையாக ஆய்வு செய்யாமல் தேரின் அளவை மாற்றியது தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என உபயதாரர்கள் வேதனை தெரிவித்தனர். மின் புதைவடம் திட்டம் என்னாச்சு... 100 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2015 ஆம் ஆண்டில் தேரோட்டம் நடந்தது. அப்போது அதிமுக, ஆட்சியில் இருந்த போது தேரோடும் வீதியில் மின்கம்பி புதைவடம் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த திட்டம் குறித்து எம்.எல்.ஏ., நீலமேகம், மேயர் ராமநாதன் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியும், திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை.