தஞ்சாவூர், ஏப்.14- தமிழ்ப் புத்தாண்டையொட்டி டெல்டா மாவட்டங்களில் நல்லேர் பூட்டும் விழாக்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. விவசாயப் பணிகளை தொடங்க ஒவ்வொரு விவசாயியும் நல்ல நாள், நேரம் பார்த்து சாகு படி பணிகளை தொடங்குவர். அதேபோல் தமிழர்களின் தமிழ் மாத ஆண்டு துவக்கத்தின் போது, நல்ல நாள் பார்த்து ஏர் பூட்டிய பின்னர், வயலில் அந்த ஆண்டுக்கான சாகுபடியை துவங்குவது டெல்டா மாவட்டங்களில் உள்ள வழக்கம். இந்நிகழ்வு ‘நல்லேர் பூட்டும்’ விழாவாக இன்றளவும் டெல்டா மாவட்டங்களில் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை சில பகுதி களில் பொன்னேர் பூட்டும் விழா என்றும் அழைப்பர். அதன்படி, தமிழ் புத்தாண்டு தினமான ஞாயிறன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் வேங்க ராயன்குடிக்காடு, பள்ளியக்ரஹாரம், பேரா வூரணி அருகே மாவடுகுறிச்சி உள்ளிட்ட பகுதி களில் நல்லேர் பூட்டி, நிகழாண்டு சாகுபடியில் அதிக மகசூலும், எவ்வித இடையூறும் இருக்கக் கூடாது என பிரார்த்தித்தனர். முன்னதாக மாடுகளை குளிப்பாட்டி, நல்லேர் பூட்ட வயலில் இயற்கை உரம், நவ தானிய விதைகளை தூவி, வெல்லம் கலந்த பச்சரிசியை கொண்டு சூரியனுக்கு படைய லிட்டு உழவு மாடுகளை கொண்டு பாரம்பரிய முறைப்படி ஏர் பூட்டினர். பேராவூரணி அருகே மாவடுகுறிச்சியில் நடைபெற்ற நல்லேர் பூட்டும் நிகழ்ச்சியில், குமரப்பா பள்ளி தாளாளர் முனைவர் ஜி.ஆர். ஸ்ரீதர், விவசாயிகளுக்கு பழம், தேங்காய், வெற்றிலை, சர்க்கரை கலந்த பச்சரிசி, காணிக்கை பணம் ஆகியவற்றை வழங்கி னார். தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி கையளவு விதைநெல் வழங்கப்பட்டது. இதனை விவசாயிகள் பெற்றுக் கொண்டனர். இருபதுக்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் ஏரில் பூட்டப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். இந்த நல்லேர் பூட்டும் நிகழ்வுகள் டெல்டா மாவட்டங்களில் ஞாயிறன்று தொடங்கிய நிலையில், சித்திரை மாத சுப தினங்களில் ஒவ்வொரு கிராமங்களில் நடைபெறவுள்ளது. பட்டுக்குடி அய்யம்பேட்டை அருகே பட்டுக்குடியில் நடந்த நல்லேர் பூட்டும் நிகழ்ச்சி முன்பு மாட்டை வைத்து நடக்கும். ஆனால் இந்தாண்டு டிராக்டரை வைத்து நடந்தது. டிராக்டரால் வயலை உழுத பின்பு, வயலில் நெல் தெளிக்கப்பட்டது. இதில் ஊராட்சித் தலை வர் ஜெய்சங்கர், நாட்டாண்மைகள், கிராம மக்கள் பங்கேற்றனர்.