districts

img

இயற்கை முறையில் சமவெளி பகுதியில் மிளகு சாகுபடி - சாதிக்கும் ஆசிரியர்

மயிலாடுதுறை, ஜன.18- மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் இயற்கை முறையில்  மிளகு சாகுபடி செய்து ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் சாதித்து வருகிறார்.                                          காவிரியின் கடைக்கோடி  டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல், வாழை, கரும்பு, பருத்தி, உளுந்து, பயிறு, காய்கறி போன்ற பயிர்களைத்தான் விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்வது  வழக்கம்,இந்நிலையில்                   உணவுப்பொருட்களில் மருத்துவ குணம்நிறைந்ததும்,  கருப்பு தங்கம் என்றும்  சொல்லக்கூடிய மிளகு மலையும், மலைசார்ந்த இடங்களில்தான் பயிரிடப்பட்டு அறுவடை  செய்யப்பட்டு வருவதை பார்த்திருக்கிறோம்.  டெல்டா பகுதியான மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள அரையபுரம் கிராமத்தில்   ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான  வீரமணி என்பவர்  தனது 3 ஏக்கர் நிலத்தில் மிளகு சாகுபடி செய்து இலாபம் ஈட்டி சாதித்து வருகிறார்.

அரசு ஊக்குவிக்க வேண்டும்'
இது குறித்து வீரமணி  கூறுகையில், விவசாய குடும்பத்தை சேர்ந்த நான் நெல், கரும்பு மற்றும் மரவகை பயிர்களை எனது நிலத்தில் சாகுபுடி செய்துள்ளேன். ஓய்வு பெற்ற பிறகு வேளாண்மை தொடர்பான அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது மழைவெள்ள காலங்களில் இப்பகுதிகளில் விவசாய பயிர்கள் அழிந்து நஷ்டத்தை ஏற்படுத்துவதை தவிர்க்கவும், விவசாயிகள் மாற்றுப்பயிர்கள் சாகுபடிக்கு செல்ல வேண்டுமென அரசு  அறிவுறுத்தியது. அதன்பேரில் வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிளகு சாகுபடி குறித்த பயிற்சிக்கு சென்றேன். அப்போது அங்கு அளித்த பயிற்சியோடு சமவெளியில் சாகுபடி செய்ய முடியுமா? என்று பல விவசாயிகள் கேள்வி எழுப்பினர். காவிரிக்கரையோரம் தரமான வண்டல் மண் பகுதியில் எனது நிலம் அமைந்திருப்பதால் மிளகு சாகுபடி செய்துபார்ப்போம் என்று துணிந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 100 மிளகு கன்றுகளை வாங்கிவந்து பயிரிட்டேன். மிளகு கொடிகள் படர்வதற்கு தனியாக செலவு செய்யாமல் தோட்டத்தில் தேக்கு, தென்னை, மகாகனி போன்ற பல மரங்கள் சாகுபடி செய்யப்பட்ட இடத்தில் இந்த மிளகு செடிகளை நடவு செய்து கொடிகளை இந்த மரங்களில் படரவிட்டேன். மிளகு கொடிகள் படர்ந்து முதல் வருடம் குறைவாக காய்த்தது. மிளகு செடிகளுக்கு மேம்படுத்தப்பட்ட சாணம் உரத்தைத் தான் கொடுத்தேன் தற்போது செடிகள் நன்றாக வளர்ந்து ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை ஆண்டிற்கு இலாபம் மட்டுமே கிடைக்கிறது. ஒருமுறை செடிகள் வைத்துவிட்டால் அவ்வப்போது இயற்கை உரம் வைத்தால் போதும்,வேறு எந்தவிதமான பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்க வேண்டிய அவசியமும் இல்லை. மிளகு கொடி படர்வதற்கான நல்லமரங்களை நாம் வளர்ப்பதால் மிளகு வருமானம் ஆண்டுதோறும் கிடைக்கும். 20 ஆண்டுகள் கழித்தால் மரங்கள் வளர்ந்து அதிலும் வருமானம் கிடைக்கும். மிளகு செடிகளை ஆடு, மாடுகள் தின்னாது, பூச்சிகள் தாக்குதலும் இருக்காது. இதனால் செலவு மிக மிகக் குறைவு. குறைந்த செலவில் அதிக இலாபம் ஈட்டலாம். இயற்கை முறையில் சாகுபடி செய்து விளைவித்த பொருளை இன்றைய நவீன உலகில் சமூக வலைதளங்களில் பதிவிட்டாலே பொதுமக்கள் தேடிவந்து வாங்கிச் செல்கின்றனர். தரமான பொருளாக கொடுக்கும்போது மக்களிடம் நேரடியாக குறைந்த விலைக்கு விற்றாலே நல்ல லாபம் கிடைக்கும். காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மிளகு சாகுபடி செய்து பயன்பெறலாம். அதனை ஊக்குவிக்க அரசும் மிளகு செடிகள், சாகுபடி முறைகள் குறித்து பயிற்சி அளித்து இடுபொருள் வழங்கி கடனுதவி ஆகியவற்றை அளித்தால் நிச்சயமாக சமவெளியில் மிளகு சாகுபடியில் சாதிக்கலாம் என்கிறார் உற்சாகமாக. காலநிலை பருவமாற்றத்தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து இயற்கை பேரிடரால்  பாதிப்பை சந்தித்து வாழ்வாதாரத்தை இழந்துவரும் விவசாயிகள் மாற்று பயிர்களையும் சாகுபடி செய்து இழப்பிலிருந்து மீளலாம்.