தஞ்சாவூர், ஜன.21 - திருவாரூரில் இருந்து பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி வழியாக காரைக்குடி வரை சென்று, மீண்டும் இவ்வழியாக திருவாரூரை சென்றடையும் முன்பதிவில்லா சிறப்பு டெமு விரைவு ரயிலின் (06197/06198) பயண நேரம், திருவாரூரில் இருந்து பட்டுக்கோட்டை வரை கேட் கீப்பர்கள் நியமனம் செய்யப்பட்டதால் 26.1.2022 ஆம் தேதி முதல் குறைக்கப்பட இருக்கிறது. 187 கி.மீ தூரம் கொண்ட மயிலாடுதுறை - திருவாரூர் - காரைக்குடி மீட்டர் கேஜ் பாதை ஆங்கிலேயர்கள் காலத்தில் போடப்பட்ட பழமையான பாதை. முதன்முதலாக மயிலாடுதுறையிலிருந்து முத்துப்பேட்டை வரை 2.4.1894 அன்று ரயில் சேவை துவக்கப்பட்டது. பின்னர் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டை வரை 20.10.1902 ஆம் தேதியிலும், பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி வரை 31.12.1903 தேதியிலும், அறந்தாங்கியிலிருந்து காரைக்குடி வரை 1952 ஆம் ஆண்டும் ரயில் சேவை துவங்கி தொடர்ந்து இயங்கி வந்தது.
இந்த தடம் டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடி வரையுள்ள மீட்டர் கேஜ் பாதையில் சென்னைக்கான ரயில் சேவை 2006 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. திருவாரூரிலிருந்து காரைக்குடிக்கு பயணிகள் ரயில் சேவை மட்டும் நடைபெற்றது. பட்டுக்கோட்டையிலிருந்து காரைக்குடி வரையிலான பயணிகள் ரயில் சேவை 14.3.2012 அன்று நிறுத்தப்பட்டு பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி வரை அகல ரயில் பாதை அமைக்கும் பணி துவங்கப்பட்டது. அடுத்த கட்டமாக திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை வரையிலான ரயில் சேவையும் 18.10.2012 அன்று நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.
காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரை அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம் 31.3.2018 அன்றும், பட்டுக்கோட்டையில் இருந்து திருவாரூர் வரையிலான சோதனை ஓட்டம் 30.3.2019 அன்றும் நடத்தப்பட்டது. தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், சிவகங்கை, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருவாரூர் ரயில் பயணிகள் நலச் சங்கங்களின் கோரிக்கையின் காரணமாக 1.6.2019 முதல், மொபைல் கேட் கீப்பர்களுடன் முதலாவது டெமு ரயில் திருவாரூரிலிருந்து காரைக்குடிக்கு இயக்கப்பட்டது. இந்த தடத்தில் 20 ரயில் நிலையங்களும் 73 ரயில்வே கேட்டுகளும் இருக்கின்றன. இந்த ரயில்வே கேட்டுகளுக்கு கேட்மேன்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் ரயில் செல்லும்போது, அனைத்து கேட்டுகளிலும், மொபைல் கேட் கீப்பர்கள் ரயிலில் இருந்து இறங்கி கேட்டுகளை மூடி ரயில் கடந்த பிறகு கேட்டை திறந்து சென்று வந்தார்கள். இதன் காரணமாக 149 கி.மீட்டர் தொலைவை இந்த ரயில் கடக்க சுமார் 7 மணி நேரம் எடுத்துக் கொண்டது. இதனால் அதிகமான பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்ய விரும்பவில்லை. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 21.3.2020 முதல் இந்த ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. மீண்டும் ரயில் பயணிகள் சங்கங்களின் கோரிக்கையின் பேரில் முன்பதிவில்லா சிறப்பு விரைவு டெமு ரயில் 4.8.2021 முதல் இயங்கி வருகிறது. விரைவு ரயில் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்வதால் 05.40 மணி நேரத்தில் செல்கிறது.
தற்சமயம் திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை வரை உள்ள 40 கேட்டுகளுக்கு ரயில்வே நிர்வாகத்தால், நிரந்தர பணியாளர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரை பணி அமர்த்தி இருக்கிறார்கள். இதன் காரணமாக ஜனவரி 26 ஆம் தேதி முதல் திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை வரை பயண நேரம் குறைக்கப்படுகிறது. புதிய கால அட்டவணைப்படி திருவாரூரில் காலை 08.15 மணிக்கு புறப்படும் ரயில் காலை 10.00 மணிக்கு பட்டுக்கோட்டைக்கும், மதியம் 01.00 மணிக்கு காரைக்குடிக்கும் சென்றடைகிறது. மதியம் 3 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்படும் ரயில் பட்டுக்கோட்டைக்கு மாலை 05.34 மணிக்கு வருகிறது. பட்டுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு இரவு 07.45 மணிக்கு திருவாரூரை சென்றடைகிறது. பயண நேரம் 7 மணியில் இருந்து 4.45 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரயில் பராமரிப்பு பணிகளுக்காக செல்வதால் இயங்காது.
பட்டுக்கோட்டையிலிருந்து காரைக்குடி வரையுள்ள சுமார் 25 கேட்டுகளுக்கு கேட் மேன்கள் நியமனம் செய்யப்பட்ட பின், திருவாரூரில் இருந்து காரைக்குடிக்கு பயணிகள் ரயில் 03.30 மணி நேரத்தில் செல்லும். கேட் மேன்கள் நியமனம் செய்யப்பட்டு, பயண நேரம் குறைக்கப்பட்டதற்கு பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் தெற்கு ரயில்வே துறைக்கு நன்றி தெரிவித்துள்ளனர். கோரிக்கை மேலும், தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம், பேராவூரணி ரயில் பயணிகள் சங்கம், பேராவூரணி நகர வர்த்தகர் கழகம் ஆகியவற்றின் சார்பில் கோரிக்கை மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், “விரைவில் பட்டுக்கோட்டையிலிருந்து, காரைக்குடி வரை உள்ள அனைத்து ரயில்வே கேட்டுகளுக்கும் கேட் மேன்களை நியமிக்க வேண்டும். டெமு ரயில் அனைத்து ரயில்வே நிலையங்களிலும் நின்று செல்ல வேண்டும். விரைவில், காரைக்குடியிலிருந்து சென்னைக்கு இரவு நேர விரைவு வண்டி, தாம்பரம் -செங்கோட்டை விரைவு ரயில், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயில்களை இயக்க வேண்டும். விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயிலை இத்தடத்தின் வழியாக மதுரை வரை இயக்க வேண்டும். சரக்கு ரயில்களை இயக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.