திருவாரூர், டிச. 26 - ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் களப்போராளி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த பி.எஸ்.தனுஷ்கோடியின் துணைவியார் பி.எஸ்.டி.மனோன்மணி (89) டிசம்பர் 25 கீழவெண்மணி தியாகிகள் தினத்தன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுச் செய்தி அறிந்து வெண்மணியில் குழுமியிருந்த கட்சியின் தலைவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், விவசாய சங்கத் தலைவர்கள், விவசாய தொழிலாளர் சங்க தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்கள் உடனே விரைந்து வந்து அம்மையாரின் உடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர். அன்னாரது இறுதி நிகழ்ச்சி டிச.26 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பாங்கல் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தி ஊடகத்துறையினர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பி.எஸ்.டி-யுடன் பணியாற்றிய மூத்த தோழர்கள், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர். கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் தோழர் பி.சீனிவாசராவால் தென்பறை கிராமம் எப்படி மறையாத வரலாறாக நிலைத்து நிற்கிறதோ, அதேபோன்று பாங்கல் கிராமமும் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடியால் நிலைத்த புகழோடு விளங்குகிறது. இத்தகைய புகழை அடைவதற்கும் “பண்ணை அடிமையாக இருந்து பாட்டாளி வர்க்க தலைவராக” உயர்வதற்கும் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடிக்கு துணையாக இருந்து, அவரின் வரலாற்றோடு பின்னிபிணைந்து வாழ்ந்து மறைந்த அம்மையாருக்கு கம்யூனிஸ்ட் இயக்கத்தினரும், பொது மக்களும் கண்ணீருடன் விடை கொடுத்தனர். அம்மையாரின் புகழுடல் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடியின் நினைவிடம் அருகில் வீரவணக்கத்துடன் அடக்கம் செய்யப்பட்டது.