கும்பகோணம், மே 3 - கும்பகோணம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட் தலைமையிடத்தில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் கடந்த ஆட்சியில் ரூ.30 லட்சம் செலவில் 3000 லிட்டர் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்பட்டு பயன்படுத்தாமல் இருந்தது. கும்பகோணம் பகுதியில் சேகரிக்கப்படும் பாலை தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்த நிலையில் சில நேரங்களில் பால் கெட்டுப் போகும் சூழ்நிலை இருந்து வந்தது. கும்பகோணத்தில் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்பட்டும், கடந்த இரண்டு வருடங்களாக பயன்பாட்டுக்கு வராத நிலையில், சிஐடியு பால் கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் குளிரூட்டும் நிலையத்தை திறக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்து தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதுகுறித்த செய்தி தீக்கதிர் நாளிதழில் வெளியானது. தற்போது திமுக ஆட்சியில் கும்பகோணம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைமையிடத்தில், ஆவின் உபப்பொருட்கள் மற்றும் பால் குளிரூட்டும் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சு.கல்யாணசுந்தரம், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், கும்பகோணம் மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சோடா.இரா.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆர். ஜி.ராஜாராமன், சிஐடியு சில்வர் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினருமான ஆ.செல்வம் மற்றும் கூட்டுறவு சங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.