districts

சம்பா சிறப்பு பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

திருச்சிராப்பள்ளி, அக்.20 -

திருச்சி மாவட்டத்தில், நடப்பு 2023 - 24 ஆம் ஆண்டு சம்பா சிறப்பு பருவத்தில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்த திட்ட தொடர் நீட்டிப்பு ஆணை பெறப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் வருவாய் கிராம அளவில் சம்பா நெல், பிர்கா அளவில் மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். சம்பா நெல், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை பயிர் காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாளாகும். இத்திட்டத்தில் பயிர் கடன் பெறும் அனைத்து விவசாயிகள் (குத்தகைதாரர் உட்பட) மற்றும் கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீடு செய்யலாம்.

இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய சிட்டா, நடப்பு ஆண்டுபயிர் சாகுபடி அடங்கல், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன், அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகலாம். மேலும் தகவலுக்கு, அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகவும்.

இத்திட்டத்தில், நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.560.20, பருத்தி பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.579.54 மற்றும் மக்காச்சோளம் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.337.16 செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம். 

பயிர் இழப்பீடு கணக்கிடுதலில் புள்ளியியல் துறை வாயிலாக பெறப்படும் எதேச்சை எண்கள் மூலம் நெற்பயிருக்கு அறிவிக்கை செய்த கிராமத்திலும், பிற பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்ட பிர்காகளிலும், தேர்வு செய்யப்படும் வயல்களில் பயிர் அறுவடை பரிசோதனை நடைபெறும். இவ்வாறு பெறப்படும் மகசூல் அடிப்படையில் பயிர் இழப்பீடு கணக்கிடப்படும்.  எனவே விவசாயிகள் தங்கள் பயிரை காப்பீடு செய்ய கடைசி நாள் வரை காத்திராமல் நவ.15 ஆம் தேதிக்கு முன்னதாகவே காப்பீட்டு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.