தஞ்சாவூர், ஜன.27- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் ஸ்ரீ பிள்ளையார் குரூப்ஸ் நண்பர்கள் அசோசியேசன் சார்பில் 22 ஆம் ஆண்டு பொங்கல் விழா, கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மாபெரும் மாட்டு வண்டி - குதிரை வண்டி எல்கைப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார், பட்டுக்கோட்டை எம்எல்ஏ கா.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் கார்த்திகேயன் வேலுச்சாமி வரவேற்றார். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து மாட்டுவண்டிப் பந்தயத்தை தொடங்கி வைத்தார். பெரிய மாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு, நடுக்குதிரை, புதுப்பூட்டு குதிரை என 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றிற்கு மொத்த பரிசாக சுமார் ரூ.4 லட்சம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாடு, குதிரை வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசு, சுழற்கேடயம் வழங்கப்பட்டது. 4 பிரிவுகளிலும் 67-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளும், 2 பிரிவுகளில் 20-க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகளும் பங்குபெற்றன. மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயங்களை, சுமார் 8 கி.மீ தூரத்திற்கு சாலையின் இருபுறமும் இருந்து பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.