districts

img

அதிமுக, பாமகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்கு அளிக்கும் வாக்கே!

திண்டுக்கல், ஏப். 16 - அதிமுக, பாமகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்கு அளிக்கும் வாக்குதான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

திண்டுக்கல் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை ஆதரித்து நிலக் கோட்டை, வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்,

அம்பானி, அதானி பிச்சைக்காரர்களா?
அம்பானி, அதானி உள்ளிட்ட பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கியிருக்கிற கடன்  ரூ.16 லட்சம் கோடியை பாஜக மோடி அரசு தள்ளு படி செய்துள்ளது. தள்ளுபடி செய்தது யார்  வீட்டுப் பணம்? மோடி அரசு அதானி, அம்பானி களுக்காக ஆட்சி நடத்தி அவர்களை உலகப் பணக்காரர்களாக ஆக்கிவிட்டு நம்மை யெல்லாம் ஓட்டாண்டிகளாக ஆக்கியுள்ளது. மோடியை நான் கேட்கிறேன்.

இந்த நாட்டில் ஒரு விவசாயி கடனையாவது தள்ளுபடி செய்திருக்கிறீர்களா? கொரோனா காலத்தில் வியாபாரிகளின் கடன்களை தள்ளுபடி செய்தீர்களா? மாணவர்களின் கடன்களை தள்ளுபடி செய்தீர்களா? அம்பானியும், அதானியும் இந்த நாட்டில்  பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்களா அவர்களது கடன்களை நீங்கள் தள்ளுபடி செய்திருக்கிறீர்களே, ஏன்? இந்த மோடியின் ஆட்சியைத் தான் எடப்பாடி பழனிசாமி தூக்கி வைத்துக்கொண்டு ஆடினார்.

தோளில் தூக்கி தூக்கி அவரது தோள்பட்டை காப்பு காய்த்து போயிருக்கும். இப்படியெல்லாம் மக்கள் மீது வரி மேல் வரி போட்டு மக்களை கொடுமைப்படுத்தும் போது அதிமுக, பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் அதனை ஆதரித்தன. கேஸ் விலையை உயர்த்தும் போதும் இரண்டு கட்சிகளும் ஆதரித்தன.

இன்றைக்கு பாஜகவிலிருந்து பிரிந்து வந்துவிட்டோம் என்று அதிமுக சொல்கிறது. மீண்டும் பாஜகவுடன் தான் இணை வார்கள். எனவே நீங்கள் பாமகவிற்கு போடும்  ஓட்டும், அதிமுகவிற்கு போடும் ஓட்டும் பாஜக விற்கு போடும் ஓட்டுக்கள் தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

நாட்டையே சிறைக்கூடமாக மாற்றும் மோடி
மோடி அரசாங்கம் தில்லி முதலமைச்ச ரையும், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த  பழங்குடி மக்களின் பிரதிநிதியாக முதலமைச்ச ராக இருந்த ஹேமந்த் சோரனையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. என்னு டைய கணவர் சிறையில் இருக்கிறார்; எனக்கு நீதி வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் ஆகியோரின் மனைவிகள் மக்களிடம் கண்ணீர் மல்க பேசுகிறார்கள்.

இந்த நாட்டில் முதலமைச்சர்களையே கைது செய்து சிறையில் போட்டு வதைக்கிற ஒரு அராஜக ஆட்சியை  சுதந்திர இந்தியாவில் இதுவரை பார்த்ததில்லை. இப்படி ஒரு ஆட்சி யை நாம் அனுமதிக்கலாமா? அப்படி அனு மதித்தால் இந்த நாட்டையே சிறைக்கூடமாக மாற்றிவிடுவார்கள். 

வரலாற்றுச் சிறப்புமிக்க   தீர்ப்பைத் தாருங்கள்!
திண்டுக்கல் தொகுதியில் கே.பாலபாரதி  3 முறை சட்டமன்ற உறுப்பினராக செயலாற்றி னார். அதே போல ஏ.பாலசுப்ரமணியம், என்.வரதராஜன், எஸ்.ஏ.தங்கராஜன் ஆகிய மகத்தான தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பழுக்கற்ற முறையில் மக்கள் சேவையை ஆற்றினார்கள்.

அப்படிப்பட்ட ஒருவராக ஆர்.சச்சிதானந்தம் மக்களுக்கு சேவையாற்றுவார். அவருடைய வெற்றிக்காக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, பழனி சட்ட மன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் அயராது பாடுபடுகிறார்கள்.

எனவே திண்டுக்கல் வாக்காளர்களாகிய நீங்கள் உங்கள் வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் அரிவாள் சுத்தியல் நட்சத்திரத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிலக்கோட்டை மற்றும் வத்தலக்குண்டு கூட்டங்களில்  திமுக பழனி சட்டமன்ற உறுப்பி னர் ஐ.பி.செந்தில்குமார் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்றனர்.