districts

சம்பா சாகுபடி முழுமை பெற மேட்டூர் அணையில் இருந்து மார்ச் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்

தஞ்சாவூர், ஜன. 25 - சம்பா சாகுபடி முழுமை பெற மேட்டூர் அணையில் இருந்து மார்ச் 2 ஆவது வாரம் வரை, பாசனத்திற்காக தண்ணீர் விட வேண்டும் என்று கடைமடைப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் கடைமடைப் பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக சம்பா சாகுபடி முழுமையாக நடைபெற்று வருகிறது. மேலும், ஏரிப்பாசன பகுதிகளான விளங்குளம், சோலைக்காடு, பெருமகளூர், கொரட்டூர், செங்கமங்கலம், அம்மையாண்டி, வீரராகவபுரம் போன்ற பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் விவசாயிகள் நேரடி விதைப்பு செய்துள்ளனர். மேட்டூர் அணை திறந்து கடைமடை பகுதிக்கு 5 நாட்கள் வீதம் முறை வைத்து தண்ணீர் வழங்கப்பட்டது. இதனால் ஆடிப்பட்டம் சாகுபடி கைவிட்டு போனது. இதையடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்கியது.  இந்நிலையில் விவசாயிகள் சம்பா சாகுபடியைத் தொடங்கினர். சாகுபடி காலதாமதமாக தொடங்கிய நிலையில், பெரும்பாலான விவசாயிகள் குறுகிய கால மற்றும் மத்திய கால  ரகங்களையே சாகுபடி செய்துள்ளனர். தற்போது சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் கதிர்வரும் தருவாயில் உள்ளது. எனவே சம்பா சாகுபடி தண்ணீர் தட்டுப்பாடின்றி முழுமை பெற மார்ச் மாதம் இரண்டாவது வாரம் வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என கடைமடைப் பகுதி விவசாயிகள் சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொறுப்பாளர் மணக்காடு வீ.கருப்பையா கோரிக்கை விடுத்துள்ளார்.

;