districts

நில உரிமையாளருக்கு இழப்பீடு வழங்காத கும்பகோணம் ஆர்டிஓ-வின் வாகனம் ஜப்தி

கும்பகோணம், அக்.11 - புறவழிச் சாலைக்காக அரசு நிலம் கையகப்படுத்தியதில் நில உரிமையாளருக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்காமல் காலதாமதம் செய்த கும்பகோணம் கோட்டாட்சியர் ஜீப் நீதிமன்ற உத்தரவின்படி ஜப்தி செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பெரியசாமி நகரை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவருக்கு சொந்தமான 2,500 சதுர அடி இடம், செட்டிமண்டபம் நிலங்கள் புறவழிச்சாலை பணிகளுக்காக கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டன. இதில் அருகில் இருந்த பிற நில உரிமையாளர்களுக்கு சதுர அடி ஒன்றுக்கு ரூ.168 வீதம் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், சுவாமிநாதனுக்கு மட்டும் சதுர அடி ஒன்றுக்கு ரூ.42 என்று மட்டும் நிர்ணயம் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து சுவாமிநாதன், கும்பகோணம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு, சுவாமிநாதனுக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீட்டுத் தொகை வழங்காததால் 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதில் மதுரை உயர்நீதி மன்ற கிளையில், கும்பகோணம் ஆர்டிஓ இந்த இழப்பீட்டினை 2022 செப்டம்பர் 7 ஆம் தேதிக்குள் வழங்குவதாக உறுதி அளித்திருந்தார்.  அதன் பிறகும் இழப்பீடு வழங்காத நிலையில், சம்பந்தப்பட்ட கும்பகோணம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் உரிமையாளர் மீண்டும் முறையிட்டார்.  இதைத் தொடர்ந்து, முதன்மை சார்பு நீதிபதி கும்பகோணம் ஆர்டிஓ அலுவலகம் இழப்பீடு வழங்குவதில் காலதாமதம் செய்ததை தொடர்ந்து, கும்பகோணம் முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவின்பேரில், கும்பகோணம் ஆர்டிஓ அலுவலகத்தின் ஜீப் ஜப்தி செய்யப்பட்டது.

;