தஞ்சாவூர், பிப்.23 - தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, அங்கக வேளாண்மையில் சிறந்த விவசாயிகளையும், புதிய தொழில்நுட்பங்களை தாங்களே கண்டறிந்து கடைபிடிக்கும் விவசாயிகளையும், மேலும் தங்களுடைய விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் விவசாயிகளையும் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பரிசளிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. முதல் பரிசு ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.60 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.40 ஆயிரம் என வழங்கப்படவுள்ளது. மாவட்ட அளவிலான குழுவில் மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், வேளாண்மை இணை இயக்குநர், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்), வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்), தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் செயற்பொறியாளர்கள், தோட்டக்கலை துணை இயக்குநர், வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர், முன்னோடி விவசாயிகள் இருப்பார்கள். அது மட்டுமில்லாமல் மாநில அளவிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான குழுவில் முதன்மை செயற்பொறியாளர், கூடுதல் வேளாண் இயக்குநர் (மத்திய திட்டம்), கூடுதல் இயக்குநர் (தோட்டக்கலைத்துறை), வேளாண் வணிகத்துறை கூடுதல் இயக்குநர், வேளாண் இணை இயக்குநர் (மாநிலத் திட்டம்), வேளாண்மை துணை இயக்குநர் தகவல் மற்றும் பயிற்சி, ஒரு விவசாயப் பிரதிநிதி ஆகியோர் இடம் பெறுவர்.
நான்கு தலைப்புகளின் கீழ் விருது வழங்கப்பட உள்ளது. முதலில் விவசாயிகளே தங்களுக்கு தேவையான இயந்திரங்களை கண்டறிந்து பயன்படுத்துதல், வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்தல், அங்கக சாகுபடி முறையில் அதிக அளவு மகசூல் பெறும் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் பரிசுத் தொகை வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விவசாயிகள் அந்தந்த பகுதி வேளாண் உதவி இயக்குநர்களிடம், அதற்கான விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து, பயிர் விளைச்சல் போட்டிக்கு பணம் செலுத்தும் கணக்கு தலைப்பில் ரூ. 100 செலுத்தி, வேளாண் கிடங்கில் பட்டியலிட்டு, விண்ணப்பங்களை இரண்டு நகல்களில் பூர்த்தி செய்து வேளாண் இணை இயக்குநருக்கு அனுப்பிட வேண்டும். விவசாயிகள், இத்திட்டத்தில் சேர வயது வரம்பு கிடையாது, உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பங்குபெறும் விவசாயிக்கு நிலம் சொந்தமாகவும் இருக்கலாம், குத்தகையாகவும் இருக்கலாம். போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் தாங்கள் செயல்படுத்தும் திட்டங்களை விரிவாக எடுத்துரைக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் கணிணி வழி காணொலி மூலம் தாங்கள் கண்டறிந்த தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாயக் கருவிகளை குழுவினரிடம் தெரிவிக்கலாம். விவசாயிகளுக்கு பயன்பெறும் விதமாக இருக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.