districts

தூய்மை, நூறுநாள் வேலைத் திட்டப் பணியாளர்களை சுற்றுலாவுக்கு அனுப்பி மகிழ்வித்த ஊராட்சி மன்றத் தலைவர்

தஞ்சாவூர், ஜூன் 26 - பேராவூரணி அருகே தூய்மைப் பணியாளர்கள், நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்களை சுற்றுலாவிற்கு அனுப்பி மகிழ்வித்த ஊராட்சி மன்றத் தலைவரை பலரும் பாராட்டினர். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாடியம் ஊராட்சியில், 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் கல்லாம்பாரை, கோட்டைக் குடியிருப்பு ஆதிதிராவிடர் காலனி, பிள்ளையார்திடல், தண்டாமரைக்காடு, வெளிமடம் உள்ளிட்ட சிறு கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் 4 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுமார் 200-க்கும் மேற்பட்ட நூறுநாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நான்கு தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 21 நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள், வேன் மூலம் மதுரை, திருச்செந்துார், பிள்ளையார்பட்டி, காரைக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு இரண்டு நாட்கள் சுற்றுலாவாக, ஊராட்சி மன்றத் தலைவரான பெ.நா.பிரேம் செல்வன் ஏற்பாட்டில் சனிக்கிழமை மாலை அனுப்பி வைக்கப்பட்டனர்.  இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் பெ.நா.பிரேம் செல்வன் கூறுகையில், கிராமத்தின் தூய்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும், ஆண்டுதோறும் உழைக்கும் தூய்மைப் பணியாளர்கள், நூறுநாள் வேலைத் திட்டப் பணியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு குழுவாக சுற்றுலா அனுப்பி வைக்க திட்டமிட்டேன். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் அனுமதி பெற்று, எனது சொந்த பணத்தில் இருந்து ரூ.35 ஆயிரம் செலவு செய்து முதற்கட்டமாக, 25 பேரை அனுப்பி வைத்துள்ளேன். இதே போன்று வரும் காலங்களில் ஒவ்வொரு குழுவாக சுற்றுலா அனுப்ப முடிவு செய்துள்ளேன். இது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றார். சுற்றுலா செல்லும் தூய்மைப் பணியாளர்கள் கூறுகையில், “சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் 37 ஊராட்சிகள் உள்ளன. எந்த ஊராட்சியிலும் இல்லாத வகையில், எங்கள் ஊராட்சி மன்றத்தலைவர் அவரது சொந்த செலவில், எங்களை போன்ற அடிமட்டப் பணியாளர்களை வேன் ஏற்பாடு செய்து, சுற்றுலாவிற்கு அனுப்பி வைப்பதுடன், கைச் செலவிற்கு பணமும் கொடுத்துள்ளது மிகுந்து மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் பணிகளை உற்சாகத்துடன் செய்ய, இந்த ஏற்பாடு ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது” என்றனர்.   ஊராட்சி மன்றத் தலைவரின் இந்தச் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

;