districts

img

செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச் சான்று வழங்கல்

தஞ்சாவூர், செப்.21 - செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தூய்மை, காய்கறித் தோட்டம் என நோயாளிகள், நோய்களை மறக்கும் அளவிற்கு அசத்திய நிலையில், தேசிய தரச்சான்று கிடைத்துள்ளதால் கிராம மக்கள் நெகிழ்ச்சியடைந்து, மருத்துவரை பாராட்டி வருகின்றனர்.   தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே செருவாவிடுதியில் தரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. நோயாளிகள் மருத்துவமனைக்கு வரும்போதே, நோய்கள் பறந்து போய்விட்டது என்ற எண்ணத்தை உருவாக்கும் வகையில், பசுமையான மரங்கள் நிறைந்த, தூய்மையான வளாகத்தில் இந்த சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.  1968 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலையம், 2014-ல் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்றது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, இந்தளவுக்கு தரம் உயர்த்தியதில், டாக்டர் செளந்தரராஜனின் பங்கு மிக முக்கியமானது. இவர் இங்கே, 1992-ல் மருத்துவராக பணியமர்த்தப்பட்டார். பின், அருகிலுள்ள சுகாதார நிலையங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டு, மீண்டும் செருவாவிடுதி சுகாதார நிலைய மருத்துவராகவும், பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலராகவும் பணியமர்த்தப்பட்டார். அப்போது, செருவாவிடுதி சுற்றுவட்டாரத்தில் சிசு மரணங்களின் எண்ணிக்கையும், பிரசவத்தின் போது உயிரிழக்கும் கர்ப்பிணிகள் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இதுகுறித்து ஆய்வு செய்த செளந்தரராஜன், கர்ப்பிணிகள் கர்ப்பக் காலத்தில் சத்தான உணவு சாப்பிட முடியாததற்கு வறுமையே காரணம் என கண்டறிந்தார்.

பின்னர், இரும்புச்சத்து மாத்திரை அதிகமாக வழங்குவதோடு மட்டுமின்றி, கர்ப்பிணிகளுக்கு வாரம் ஒருமுறையாவது இயற்கையான சத்துணவு வழங்க வேண்டும் என முடிவு செய்தார்.  இதற்காக, மருத்துவமனை வளாகத்திலே கர்ப்பிணிகளுக்காக, தனியாக ஒரு ஏக்கரில் காய்கறி தோட்டத்தை அமைத்து, இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி, கத்திரிக்காய், வெண்டை, புடலங்காய், தக்காளி, துவரை என முக்கிய சத்துகள் நிறைந்த காய்கறிகளையும் சாகுபடி செய்துள்ளனர். தென்னை மரம் வைத்து, அதிலிருந்து தேங்காய், எண்ணெய் என அனைத்தையும் பயன்படுத்திக் கொள்கின்றனர். மேலும், நாட்டுக்கோழி, பசுமாடு வளர்த்து பால், முட்டைகளை கர்ப்பிணிகளுக்கு வழங்கினார்.  தொடர்ந்து அவரின் முயற்சியாலும், தன்னார்வலர்களின் உதவியாலும் நவீன அறுவை சிகிச்சை கூடம், பூங்கா, எக்ஸ்ரே, கர்ப்பிணிகளுக்கு வீடு தேடிச் சென்று சத்துப்பொருட்கள் வழங்குவது என மருத்துவமனையை மேம்படுத்தினார். கிராம மக்களும் அவரின் செயலுக்கு ஒத்துழைப்பு அளித்தனர். இத்தகைய சிறப்பு மிக்க ஆரம்ப சுகாதார நிலையத்தை தேசிய தரக் கட்டுப்பாடு நிறுவனம் மதிப்பீடு செய்தது. அதற்கான தேசிய தர உறுதி நிர்ணய திட்ட விருது மற்றும் மகப்பேறு அறை மற்றும் கர்ப்பிணிகளுக்கான அறுவை அரங்கின் தரம் உயர்த்தும் திட்ட சான்றிதழை செருவாவிடுதி வட்டார மருத்துவ அலுவலர் செளந்தராஜனிடம், தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த வாரம் வழங்கிப் பாராட்டினார். தேசிய தரச் சான்றிதழ் பெறும் அளவிற்கு, எங்கள் கிராம ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்ந்திருப்பது நெகிழ்ச்சியாக உள்ளது என மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என அனைவருக்கும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

;