districts

img

நீட், போதை, வன்கொடுமைக்கு எதிராக சென்னையில் மினி மாரத்தான் ஓட்டம் வாலிபர்கள், மாணவர்கள் பங்கேற்பு

சென்னை, ஏப். 17 - காலில் செருப்பு கூட இல்லாமல் ஓடிய வாலிபர் மாரத்தான் போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்றார். ‘நீட்’, போதை, பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி ஞாயிறன்று (ஏப். 17) எம்ஜிஆர் நகரில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளின் விருகம்பாக்கம் பகுதிக்குழுக்கள் சார்பில் இந்த போட்டி நடைபெற்றது. மாணவர்கள், வாலிபர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதில் சரிபாதிக்கும் மேல் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்போட்டியை விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகரராஜா தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “திமுக மற்றும் தோழமை கட்சிகள் நீட் எதிர்ப்பில் உறுதியாக உள்ளன. நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி இரண்டு முறை சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை, ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் உள்ளார். இதனால் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளோம். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பாலியல் வன்கொடுமைகளை தடுக்க புகார் எண்களை வெளியிட்டும், போதை ஒழிப்பின் ஒருபகுதியாக கஞ்சா விற்பனையை தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மாணவர்கள், இளைஞர்களை நல்வழிப்படுத்த, சமூகத்தில் விழிப்புணர்வை உருவாக்க தொடர்ந்து டிஒய்எப்ஐ, எஸ்எப்ஐ விழிப்புணர்வு இயக்கங்களை நடத்தி வருகிறது. அந்த அமைப்புகளை பாராட்டுகிறேன்” என்றார்.

சைக்கிள்
இந்த போட்டியில் காலில் செருப்பு கூட இல்லாமல் ஓடிய வாலிபர் சிவசஞ்செய் முதல் பரிசை வென்றார். அவருக்கு ஏ.எம்.வி.பிரபாகரராஜா சைக்கிளை பரிசாக வழங்கினார். இரண்டாம் இடம் பிடித்த திருமலை பாலாஜிக்கு, ஸ்மார்ட் வாட்சை வாலிபர் சங்க தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் வழங்கினார். மூன்றாம் இடம் பிடித்த பச்சையப்பனுக்கு, மாணவர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் ஆர்.ஜான்சி ஷூ-வை பரிசாக வழங்கினார். சிறப்பிடம் பெற்ற மாணவி சுஜிதாவிற்கு, ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பகுதிச் செயலாளர் சாந்தி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வாலிபர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் ஏ.பாக்கியம், விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் க.தனசேகரன், கே.கண்ணன், ஸ்டெல்லா ஜாஸ்மின் ரத்னா, மு.ராசா, சிபிஎம் பகுதிச் செயலாளர் இ.ரவி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, பகுதிச் செயலாளர் வினோத், பொருளாளர் பிரகாஷ், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ஆனந்த், செயலாளர் ரா.பாரதி, பகுதி ஒருங்கிணைப்பாளர் மணிபாரதி, வரவேற்புக்குழு தலைவர் ஏ.நடராஜன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.

;