districts

யார் சொல்வார் நம் கதைகளை?

இது இந்திய ஊடகங்களின் சாதிய உள்ளடக்கம் பற்றிய ஆக்ஸ்பாம் இந்தியா & நியூஸ் லாண்டிரி ஆய்வு  தரும் தகவல்கள். அதிர்ச்சியாக உள்ளன. ஆய்வறிக்கையின் தலைப்பு இது: “யார் சொல்வார்கள் நமது கதைகளை என்ற கேள்வியும், இந்திய ஊடகத்தில் விளிம்பு நிலை சமூகங்களின் பிரதிநிதித்துவமும்” (Who tells our stories matters: Representation of marginalised caste groups in Indian media). இதோ ஆய்வுத் தகவல்கள்... அச்சு, காட்சி, மின்னணு ஊடகங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் “உயர்” சாதியினர். எந்தவொரு முக்கியமான ஊடகங்களிலும் பட்டியல் சாதி, பழங்குடியினர் தலைமைப் பொறுப்புகளில் இல்லை.  இந்தி, ஆங்கில ஊடகங்களில் வரும் ஒவ்வொரு ஐந்து கட்டுரைகளில் மூன்று “உயர் சாதியினர்” எழுதியவையாக உள்ளன. விளிம்பு நிலை சமூகத்தினர் எழுதுபவை ஐந்தில் ஒன்றுதான். செய்தி அறையில் தலைமை ஆசிரியர், மேலாண் ஆசிரியர், நிர்வாக ஆசிரியர், துறைத் தலைவர், உள் வெளி தகவல்களை தொலைக் காட்சி சேனல், செய்தி இணைய தளங்கள், இதழ்களில்  தொகுப்பவர்கள் என உள்ள 121 பொறுப்புகளில் 106 பேர் உயர் சாதியினர். 5 பேர்  பிற்பட்ட சமூகத்தினர். 6 பேர் சிறுபான்மையினர். 4 பேர் பின்புலத்தை அறிய இயலவில்லை.  இந்தி சேனல்களில் நெறியாளர்களாக வரும் 40 பேர், ஆங்கில சேனல்களின் 47 பேர்களில் 3/4 பேர் உயர் சாதியினர்தான். அவர்களில் ஒரு தலித், ஆதிவாசி கூட கிடையாது. பிரைம் டைம் (பிரதான நேரம்) டி.வி நிகழ்ச்சிகளில் விவாத அரங்கில் வரும் கருத்தாளர்களில் பெரும்பான்மையினர் உயர் சாதியினர்.  ஆங்கில அச்சு நாளிதழ்களில் வரும் கட்டுரைகளில் தலித்/ ஆதிவாசிகளின் படைப்புகள் 5 சதவீதம் கூட கிடை யாது. இந்தி நாளிதழ்களில் இது 10 சதவீதம் கூட கிடையாது. செய்தி இணைய தளங்களில் வரும் கட்டுரைகளில் 72 சதவீதம் உயர் சாதியினர் எழுதியவை.  12 இதழ்களை ஆய்வு செய்ததில் அதில் வந்துள்ள 972 அட்டைப்பட கட்டுரைகளில் 10 மட்டுமே சாதி குறித்ததாக இருந்தன.  இந்த ஆய்வு ஏப்ரல் 2021 - மார்ச் 2022 க்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்டதாகும்.  20000 இதழ்கள் மற்றும் செய்தியேடுகளில் வந்துள்ள கட்டுரைகள், 2075 பிரைம் டைம் விவாதங்கள், 76 விவாத நெறியாளர்கள், 3318 கருத்தாளர்கள், 12 மாத ஆன்லைன் செய்திகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆய்வாக அமைந்தது.  ஆய்வின் அளவுகோல்களாக படைப்பாளிகளின் சமூக வாழிடம், செய்திக்குள்ள முக்கியத்துவம், தலைப்புகள் ஆகியன எடுத்துக் கொள்ளப்பட்டன.  ஊடகங்கள் தங்களின் செயல்பாட்டை, பிரதிநிதித்து வத்தை பன்முகம் கொண்டதாக மாற்றி அமைக்க வேண்டும்.  நன்றி: தி அருணாச்சல் டைம்ஸ்- 15.10.2022 - கே.எஸ்.

;