திருவள்ளூர்,ஜன.18- பழவேற்காடு அழகிய சுற்றுலா பகுதியா கும். இங்கு ஆண்டுதோறும் காணும் பொங்கலை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூடி பொழுது போக்குகின்றனர். குறிப்பாக காணும் பொங்கல் தினமான புதனன்று (ஜன17), பல்லாயிரக்கணக்கான மக்கள் பழவேற்காடு கடற்கரை பகுதிக்கு படையெடுத்தனர். சொந்த வாகனங்கள் மூலமும் அரசு பேருந்துகள் மூலமும் பொது மக்கள் குவிந்ததால் காவல்துறையினர் திணறினர். மேலும் அரசுப் பேருந்தில் மூலம் பழவேற்காட்டிற்கு வந்த பயணிகள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் கடற்கரைக்கு நடந்தே சென்று மீண்டும் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு பேருந்து நிலையம் வந்தடைந்து சோர்வாகவும்,உடல் உபாதைகளோடும் புறப்பட்டு வீட்டிற்கு சோர்வுடன் . போதிய பேருந்து இல்லாததால் பெண்களும் குழந்தைகளும் முண்டியடித்து ஆபத்தான நிலையில் பேருந்தில் ஏறி இருக்கையை பிடிப்பதற்கு பெரும் சிரமம் அடைந்தனர். கடற்கரை பகுதியில் கழிப்பறை இல்லாததால் பெண்களும் குழந்தைகளும் கடலில் குளித்த ஈரத்துணியோடு குளிரில் நடந்தே சென்றனர். மேலும் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பெரும் அவதிக்கு ஆளாகினர்.மேலும் சுட்டெரிக்கும் வெயிலில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாதுகாக்கப்பட்ட இலவச குடிநீர் இல்லை. இளைப்பாறுவதற்கு நிழற்குடை களும் இல்லை. இவ்வாறாக சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற எந்த வசதியும் செய்து தராததால் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுபோன்று பழவேற்காடு பகுதிக்கு பல்வேறு விடுமுறை தினங்களில் பொதுமக்கள் கூடுவதும் தொடர்ச்சியாக இந்த வசதி குறைபாடுகள் நீடிப்பதும் இதனால் பழவேற்காடு பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்து வருவ தற்கு காரணமாக உள்ளது குறிப்பிடத் தக்கது.