districts

img

கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றவே ரூ. 2000 நோட்டுக்கள் திரும்ப பெறப்படுகிறது மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தில் ஜி.ராமகிருஷ்ணன் விமர்சனம்

சென்னை, மே 23 -

   கருப்பு பணத்தை வெள்ளை யாக மாற்றவே 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தென்சென்னை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடை பெற்று வருகிறது.

    இதனையொட்டி திங்களன்று (மே 22) எம்.ஜி.ஆர்.நகரில் பிரச்சாரக் கூட்டம் நடை பெற்றது. விருகம்பாக்கம் பகுதி, 137வது வட்டக் கிளைகள் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு: ஒன்றிய பாஜக அரசு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. மக்களின் உரிமைகளை தொடர்ந்து பறித்து வருகிறது. விலை வாசி உயர்வுகளின் வாயிலாக மக்கள் மீது யுத்தம் தொடுத்து வரு கிறது. இதனால் எழும் மக்களின் அதிருப்தியை திசைதிருப்ப மத வெறியை தூண்டுகிறது.

    மதக்கல வரமற்ற கேரளாவின் ஒற்றுமையை சீர்குலைக்கவே ‘கேரளா ஸ்டோரி’ என படம் எடுத்துள்ளனர். ரஷ்யா-உக்ரைன் போரால் கச்சா எண்ணை விலை குறைந்துவிட்டது. ரஷ்யாவிடம் இருந்து ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணையை 60 டாலருக்கு கொள்முதல் செய்து, சுத்திகரித்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறது. ஆனால், ஒன்றிய அரசு பெட்ரோலிய பொருட்களின் விலைகளை குறைக்க மறுத்து வருகிறது. விலை குறைந்ததன் பயனை மக்கள் அனுபவிக்க முடியவில்லை. மகாத்மா காந்தி கொலை வழக்கில் 7வது நபராக குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட் டவர் சவார்க்கர். நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி படத்திற்கு அருகே சவார்கர் படத்தை ஒன்றிய பாஜக அரசு வைத்தது. தற்போது சவார்க்கர் பிறந்த நாளில், நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க உள்ளதை ஏற்க முடியாது. 2016ம் ஆண்டு 17 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு தற்போது 33 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதில் 3.40 லட்சம் கோடி ரூபாய் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக உள்ளன. மொத்த பணத்தில் 10 விழுக்காடு அளவே 2000 ரூபாய் நோட்டுகள் உள்ளன. கார்ப்பரேட் கம்பெனிகள், பணக்காரர்கள் வைத்துள்ள கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காக தற்போது 2ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெறுகிறது.

   உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக டெல்லி மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதுவும் ஏற்புடையதல்ல. பாஜக வீழ்த்த முடியாத சக்தியல்ல என்பதை அண்மைக் கால தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி வருகின்றன.

   எனவே, மக்கள் விரோத பாஜக-வை 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்த சபதமேற்போம். இவ்வாறு அவர் கூறினார். இந்தக் கூட்டத்திற்கு கிளைச் செயலாளர் வி.கார்த்திக் தலைமை தாங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், பகுதிச் செயலாளர் இ.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.செங்கல்வராயன், டி.சந்துரு, பகுதிக்குழு உறுப்பினர் டி.விஜயகுமாரி, என்.ராஜா, நடராஜன், ஆர்.தீனதயாளன், வி.சேகர் உள்ளிட்டோர் பேசினர்.