districts

img

அரசு பள்ளியை மீட்ட பொதுமக்கள்

சிதம்பரம், பிப்.17- சிதம்பரம் அருகே சி.முட்லூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி தனித்தனியாக இயங்கி வருகிறது.  இந்தப் பள்ளிகளில் சி. முட்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப்புற மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் முகப்பில் உள்ள சாலையின் வழியாக நாகப்பட்டினம் முதல் விழுப்புரம் வரை 4 வழி புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்தசாலை அமைக்க பள்ளியை வேறு இடத்தில் கட்டிக்கொடுப்பதாக தேசியநெடுஞ்சாலைதுறையினர் கூறியுள்ளனர். இதற்கு சி. முட்லூர் ஊராட்சி மன்ற தலைவர் வேதநாயகி, புவனகிரி ஒன்றியத்துணைத்தலைவர் வாசுதேவன் மற்றும் வார்டு உறுப்பினர்கள்,  பொதுமக்கள் பள்ளியை இடிப்பதற்கு முன் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தேர்வு நேரம்  கல்விக்கு இடர்பாடு இல்லாமல் மாற்று இடத்தை ஏற்பாடு செய்த பிறகே பள்ளியை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெடுஞ்சாலை துறை மற்றும் கல்வித்துறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் திடீரென நெடுஞ்சாலை துறையினர் பள்ளியில் உள்ள பொருட்களை காலி செய்து விட்டு உடனடியாக மாணவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சி.முட்லூர் ஊராட்சி மன்ற தலைவர் வேதநாயகி தலைமையில் பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர்  கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இதில் மாணவர்களுக்கு மாற்று இடம் தயார் செய்து கொடுத்த பிறகே பள்ளியை இடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் மற்றும் கல்வித் துறையினருக்கு  வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.