கிருஷ்ணகிரி,அக்.14- கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் உள்ளது பாம்பாறு. மல்லப்பாடி மரிமானப் பள்ளி, காவேரி நகர் வி.கே.நகர், நாயுடு கொட்டாய், முஜு நாயுடு கொட்டாய் மற்றும் ஜிட்டிகானூர், முண்டி கானூர், மஸ்திகானூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் பர்கூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் பகுதிக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவ மனைக்கு செல்வோர், விவசாய பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்லும் விவசாயிகள் என அனை வரும் பாம்பாறு ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். மழைக்காலங்களில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக செல்லும் போது மறு கரையில் உள்ள பர்கூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அந்த காலக் கட்டத்தில் சிப்காட், அச்சமங்கலம் கூட்ரோடு வழியாகவும், கப்பல் வாடி, சிகரலப்பள்ளி, சக்கில் நத்தம், மல்லப்பாடி வழியாக 10 முதல் 15 கி. மீட்டர் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. எனவே, பாம்பாற்றின் குறுக்கே மல்லபாடி அருகில் பாலம் கட்ட வேண்டும் என நீண்ட காலமாக மாவட்ட வட்ட அரசு அலுவலர்களுக்கும் அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். மேலும் மழைக்காலங்களில் ஆற்றில் நீர் அதிகரிக்கும் போ தெல்லாம் ஆபத்தை உணராமல் ஆற்றுக்குள் இறங்கி செல்ல முயன்ற போது, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பத்துக்கும் மேற்பட்டோர் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்துள்ளனர். ஆனால், பாலம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் விளைவு, மழைக் காலங்களில் தொடர்ந்து இதுபோன்ற உயிரிழப்பு ஏற்படுவதுடன் 15 கிலோ மீட்டர் சுற்றிக் கொண்டு செல்லும் அவலத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மல்லப்பாடி பகுதியில் பாம்பாற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.