கிருஷ்ணகிரி, மார்ச் 13- ஓசூர் வட்டம், பாகலூரில் மூடப்பட்ட ஏசியன் பேரிங்ஸ் தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்தவேண்டும், தொழி லாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி ஊதியம், பணிக்கொடையை உடனடி யாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆலை வாயிலில் உண்ணா நிலை போராட்டம் நடைபெற்றது. ஓசூர் அருகே பாகலூரில் 1982 ல் ஏசியன் பேரிங்ஸ் லிமிடெட் (டிட்கோ) தமிழ்நாடு அரசின் பங்குத் தொகையுடன் 70 ஏக்கரில் துவங்கப்பட்டது. 760 நிரந்தர தொழிலாளர்களும் 350 ஒப்பந்த தொழி லாளர்களும் பணியாற்றி வந்தனர். நிரந்தர தொழிலாளர்கள் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் மட்டுமே ஊதியம் பெற்று வந்த னர். இந்நிலையில் நட்டம் என காரணம் கூறி 2006 ஜனவரியில் நிர்வாகம் கத வடைப்பு செய்தது. வேலை செய்த அனைவருக்கும் 8 மாத ஊதியம்,போனஸ் தராமலும்,ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்ற 300 பேருக்கு பணிக்கொடை தராமலும் நிர்வாகம் வஞ்சித்து வருகிறது. கடும் நெருக்கடி, வறுமை காரணமாக 90 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர். நட்டம்என்று கூறிய ஆலை நிர்வாகம் நிர்வாகம், அலுவலர்களுக்கு மட்டும் இதுவரை தொடர்ந்து ஊதியம் வழங்கி வரு கிறது. மேலும் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு ரூ28 கோடிக்கு மேல் கடன் கட்டியுள்ளனர். கதவடைப்புக்கு எதிராக தொழி லாளர்கள் 2 வழக்கு தொடுத்ததில் 2014 ஆம் ஆண்டு நீதிமன்றம் தொழி லாளர்களுக்கு சேர வேண்டியதை உட னடியாக கொடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தும், தொழிலாளர் துறை ஆணையிட்டும் ஏற்காமல் நிர்வாகம் 1000 தொழிலாளர்களின் குடும்பத்தை பட்டினி போட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்நிலையில் ஆலைத்தொழிலாளர்களை பாதுகாக்க சிஐடியு சார்பில் அடையாள உண்ணா நிலை போராட்டம் மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்க தலைவர் ரவிவர்மா,செயலாளர் சிவராமன்,பொருளாளர் முருகேசன், நிர்வாகி முனியாண்டி,மாவட்டத் துணைத் தலைவர் பி.ஜி.மூர்த்தி, நிர்வாகிகள் பிரபாகரன்,மாதவன், தியாகராஜன் கலந்து கொண்டனர்.
தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக காவல்துறை அதிகாரி அராஜகம்
உண்ணா நிலை போராட்டம் துவங்கியவுடன், பாகலூர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் நிர்வாகத்தை எதிர்த்து உண்ணா நிலை போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. மீறினால் கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டினார். இதுகுறித்து சிஐடியு தலைவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாகலூர் காவல் நிலையத்தின் சரக காவல் ஆய்வாளர் சரவணன் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க முயற்சி செய்கிறார். ஏற்கனவே சூளகிரியில் நடைபெற்ற மலைவாழ் மக்கள் சங்க ஆர்ப்பாட்டத்திலும் ஆய்வாளர் சரவணன் கடுமையாக பேசி முரட்டுத்தனமாக கைது செய்தார். மேலும் செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களையும் ஒருமையில் பேசி மிரட்டியுள்ளார். சூளகிரி மற்றும் இதன் காவல் எல்லைக்குட்பட்ட பாகலூர் பேரிகை பகுதிகளிலும் ஜனநாயக முறையிலான போராட்டங்கள் கூட செய்யக் கூடாது என இவர் மிரட்டி வருவது ஏற்க முடியாது. இது குறித்து மாவட்ட ஆட்சியரும், தமிழக அரசும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.