districts

img

குப்பை அள்ளும் பணியில் தனியார்மயத்தை கைவிட வேண்டும் மாநகராட்சி ஆணையரிடம் செங்கொடி சங்கம் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 29 -

     பெருநகர சென்னை மாநகராட்சியில் மேலும் 2 மண்டலங்களில் குப்பை அள்ளும்  பணியை தனியாருக்கு விடுவதை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் வலியுறுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனை சந்தித்து சிஐடியு மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, செங்கொடி சங்கத்தின் தலைவர் ஜெ.பட்டாபி. பொதுச்செயலாளர் பி.சீனிவாசலு, பொருளாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.

    அப்போது, சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்க ளில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு விடப்பட்டுள்ளது. இதனை தொடக்கம் முதலே சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் எதிர்த்து வருகிறது. மாநகராட்சி நேரிடையாக 4 மண்டலங்களில் குப்பை  அள்ளும் பணியை செய்கிறது. இந்த பணி களோடு ஒப்பிடும் மற்ற 11 மண்டலங்களில் தனியார் முறையாக குப்பை அள்ளாமல், துர்நாற்றம் வீசுகிற நிலை உள்ளது.

    ஒனிக்ஸ், நீல் மெட்டல் பனால்கா,  ராம்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், குப்பை அள்ளுவதில் பல்வேறு முறைகேடுகளை செய்தன. பல நூறு கோடிகள் கொள்ளையடித்தனர். இதனை அன்றைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் பா.தேவி ஆதாரத்துடன் வெளிக்கொணர்ந்தார். இதனால் மோசடி நிறுவனங்களுக்கு அபராதம் உள்ளிட்ட தண்டனை வழங்கப்பட்டது.

   மாநகராட்சி நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை, ஒப்பந்த நிறுவனங்கள் ஐந்து பேருக்கு பிரித்து கொடுத்து கொள்ளையடிக்கின்றன. குப்பை  எடுக்கும் பணியில் ஈடுபடும் அனைவரும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களாக உள்ளனர். மேலும் இவர்களில் பெரும்பகுதி  பெண்கள். இந்த விளிம்பு நிலை மக்கள்  நிலையான வேலை, நிரந்தர சம்பளம், இதர சட்டச் சலுகைகள் என கண்ணியமாக வாழ பணிநிரந்தரம் செய்ய கோரி போராடி வருகின்றனர்.

   2021ம் ஆண்டு தனியார்மய பிரச்சனை வந்தபோது தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், அமைச்சர்  பி. கே.சேகர்பாபு உள்ளிட்டோர் அன்றைய மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் வழங்கினர். 12 ஆயிரம் தொழிலாளர்களை பாதிக்காதவாறு அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள நிரந்தரபணியிடங்களில் நியமிக்க கோரினர்.

   இந்த நிலையில், மாநகராட்சி தனது நேரடி கட்டுப்பாட்டில் உள்ள 5,6 ஆகிய மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு   கொடுத்துள்ளது. இதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடத்திய போது, அனைத்து தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையும் மீறி  மாநகராட்சி துணை ஆணையர் தனியார் மயத்தை அமல்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

    சமூக நீதிக்கு எதிரான இந்த நடவடிக் கையை கைவிட வேண்டும், மாநகரம் முழுவதும் உள்ள தூய்மை பணி தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதனையடுத்து துணை ஆணையரை  அழைத்து, பொதுமக்கள், தொழிற் சங்கங்கள் தெரிவித்த ஆட்சேபனைகளை மாநில அரசுக்கு கடிதமாக அனுப்ப வேண்டும்  என்று ஆணையர் உத்தரவிட்டார். மேலும், இந்த தனியார்மயத்தை அவசரஅவசரமாக மாநகராட்சி அமல்படுத்தாது என்று கூறிய  ஆணையர், தொழிற்சங்கத்தின் கோரிக் கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்