districts

பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்கும் வழக்கு: 6 மாதத்தில் முடிக்க உத்தரவு

சென்னை, செப். 17- கோவைக்கு தங்கம் கடத்திய மலேசியா தம்பதியின் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை 6 மாதங்களில் முடிக்க கோவை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மலேசியாவி லிருந்து கோவை வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் நுண்ணறிவு இயக்குனரகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப் படையில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் மலேசியாவை சேர்ந்த அங்கேஸ்வரன் மற்றும் அவரது மனைவி  நந்தினியிடமிருந்து ரூ.4.58 கோடியிலான 4.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், முடக்கப்பட்ட பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்கக் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுவை கோவை மாவட்டத்  தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும்  குற்றவியல் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். அதில் “தங்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட போது நிபந்தனை கள் எதுவும் விதிக்கப்படாத நிலையில்,  பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க உத்தர விட வேண்டும்” என கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வருவாய் நுண்ணறிவு இயக்குநர் தரப்பில்  ஆஜரான வழக்கறிஞர், “பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்தால் அவர்கள் மலேசி யாவிற்கு தப்பிச்செல்ல வாய்ப்புள்ளது. எனவே பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க கூடாது” என வாதிட்டார். இதனையடுத்து, பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க கோரிய மலேசிய தம்பதியின் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி, அவர்கள் மீதான வழக்கின் விசார ணையை 6 மாதங்களில் முடிக்க கோவை  தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத் திற்கு உத்தரவிட்டுள்ளார்.

;