சிதம்பரம்,டிச.14- சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பில் உள்ள எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க கோரிக்கை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மாதவன் துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் ஜி.ஆர். ரவிச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் ஆதிமூலம் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் நிறைவுரையாற்றினார். இதனை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. சங்கத்தின் தலைவராக அண்ணாதுரை, செயலாளராக ரங்கசாமி, பொருளாளராக கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ . 5000 வழங்க வேண்டும், வருவாய் முறை சட்டத்தை ரத்து செய்து விட்டு மாநில அரசு பரிந்துரை விலையை அறிவித்து வழங்க வேண்டும். எம்ஆர்கே கூட்டுறவு சக்கரை ஆலையில் அதிமுக அரசில் முடக்கப்பட்ட எத்தனால் கூட்டு மின் உற்பத்தி திட்டத்தை விரைவாக துவக்க வேண்டும். கரும்பு சுமை ஏற்றி வரும் வாகனத்தை உடனே எடை போட்டு நிறுத்தவேண்டும், உடனுக்குடன் கரும்பு எடையை விவசாயிகளுக்கு கைபேசியில் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்க வேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலை கடன் சுமையை மாநில அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.