districts

img

நவீன காலத்தில் போன் மூலமாக திருடுகிறார்கள்: டிஜிபி

சென்னை,பிப்.7- சென்னை எழும்பூரிலுள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ‘சைபர் கிரைம்’ விழிப்புணர்வு தொடர்பாக மாணவிகளுக்கான சிறப்பு சர்வதேச கருத்தரங்கம் செவ்வாயன்று(பிப். 7) நடந்தது. இதில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.  அப்போது அவர் பேசியதாவது:- இந்த நவீன காலத்தில் ‘சைபர் கிரைம்’, ‘செக்யூரிட்டி’ குறித்து எல்லோரும் தெரிந்து கொள்வது அவசியமாகும்.இளைய தலைமுறை மாணவிகள் இதனை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். பெண்கள் 4 விதமான மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும். அதில் உடல் மொழி முக்கியமானது. இணையம் உலகளாவிய புத்தகம் ஆகும். அதில் தேடினால் எல்லாம் கிடைக்கும்.  முன்பெல்லாம் வீட்டிற்கு வந்து கதவை உடைத்து தான் திருடினார்கள். இப்போது நவீன காலத்தில் போன் மூலமாகவே எல்லாவற்றையும் நிகழ்த்தி விடுகிறார்கள். அப்படியான  நிறைய பேர் பணம், பொருள் மற்றும் தகவல்களை இழந்து விடுகிறார்கள். சைபர் செக்யூரிட்டி நன்றாக இருக்க வேண்டுமென்றால் இன்றைய மாணவர்களாகிய நீங்கள் அதனை நன்றாக படிக்க வேண்டும்.  ‘லிங்க்’ என்றாலே ஆபத்து தான். அது குறித்து விழிப்புணர்வு மிக முக்கியம் தேவை. தமிழ்நாட்டில் ‘காவல் உதவி’ என்ற செயலியை நமது காவல்துறை செயல்படுத்தி வருகிறது. அதில் 66 விதமான வசதிகள் உங்களுக்காக உள்ளது.  அதிகம் படித்தவர்கள் ‘இணைய' குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். அறிவாற்றல் மிக்க நன்கு பயிற்சி பெற்றவர்கள் தான் இதனை செய்கிறார்கள். நம்நாட்டிற்கு அதிக பயிற்சி பெற்ற கணினி மென்பொறியாளர்கள் தேவைப்படுகிறது. அதை நீங்கள் கற்றுக்கொண்டால் கோடி ரூபாய் வரை சம்பளம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.  இவ்வாறு அவர் பேசினார்.

;