districts

பொய் வழக்கு பதிவு செய்த உதவி ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

விழுப்புரம், மே 20- பொய்வழக்கு பதிவு செய்த மயிலம் காவல் துறை உதவி ஆய்வாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பொம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். பழங்குடி இருளர் வகுப்பை சேர்ந்த இவரை கடந்த 14.5.2019ஆம் ஆண்டு மயிலம் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் அப்போதைய உதவி ஆய்வாளர் விவேகானந்தன் கடுமையாக தடியால் தாக்கினார். காவல் நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்ட மோகன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட மோகனிடம் இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் பேராசிரியர் கல்விமணி, எழுத்தாளர் முருகன் ஆகியோர் புகார் மனு வாங்கிக்கொண்டு மயிலம் காவல் நிலையம் வந்தனர். அப்போது உதவி ஆய்வாளர், சீருடை அணியாத காவலர்கள் வெங்கடேசன், அறிவுநிதி ஆகிய 3 பேரும் சேர்ந்து பேராசிரியர் கல்விமணி எழுத்தாளர் முருகப்பன் ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து பொய் வழக்கு பதிவு செய்த உதவி ஆய்வாளர் விவேகானந்தன் உட்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மக்கள் கண்காணிப்பகம் இயக்குனர் வழக்கறிஞர் ஹென்றிடிபேன் உள்ளிட்டோர் மாநில மனிதஉரிமை ஆணையத்தில் புகார் அளித்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி துரை சந்திரன் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டார். விசாரணை முடிவடைந்த நிலையில் பேராசிரியர் கல்விமணி, எழுத்தாளர் முருகப்பன் ஆகிய 2 பேரை மூர்க்கதனமாக கைது செய்து பொய் வழக்கு பதிவு செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட விவேகானந்தனுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும், துறை ரீதி யான நடவடிக்கை எடுக்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். ஒரு மாத காலத்திற்குள் பேராசிரியர் கல்யாணி, எழுத்தாளர் முருகப்பன் ஆகிய 2 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், இந்த தொகையினை உதவி ஆய்வாளர் விவேகானந்தத்திடம் இருந்து வசூலிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;