விழுப்புரம், ஆக. 17- விழுப்புரம் காவல் நிலைய சித்திர வதை மரணமடைந்த பட்டியலின இளைஞர் ராஜா (48) வழக்கில் நீதி கிடைக்க மீண்டும் நீதிமன்றத்தை நாட காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு-புதுச்சேரி காவல் சித்திர வதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப் பாளர் ஆசீர்வாதம் விழுப்புரத்தில் சனிக்கிழமை (ஆக.17) செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட ஜி.ஆர்.பி தெருவை சேர்ந்த பட்டியலினத்தவர் ராஜா. இவரை கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் சட்டவிரோதமாக காலை 9 மணிக்கு கைது செய்து விசா ரணைக்கு அழைத்து சென்றனர். அங்கு சித்ரவதை செய்து கடுமையாக தாக்கப்பட்டார். இதையடுத்து, காவல்நிலைய ஜாமினில் அனுப்பினர். காவல் நிலையத்தில் இருந்து 11 மணிக்கு வீடு திரும்பியதும் ராஜாவுக்கு 11.20 மணிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் 12:40 மணிக்கு உயிரிழந்தார். தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் காவல்துறையினர் சித்திரவதை செய்துள்ளதாகவும் அவரது மனைவி அஞ்சு, புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை காவல் நிலைய மரணமாக கருதப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், ராஜாவின் முதல் பிரேத பரிசோதனையில் வெளிப்புற காயங்கள் எதுவும் குறிப்பிடப்பட வில்லை. மூக்கு மற்றும் வாயில் உணவுத்துகள் இருக்கிறது. புரை யேறி இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதலாம் என மருத்துவர் பரிந்து ரைத்துள்ளார். அதை ஏற்றுக்கொள்ள வில்லை என்பதால் இரண்டாவது பிரேத பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தர விட்டது. இதையடுத்து, புதைத்த சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். இதில் பல்வேறு முரண்பாடுகள் மற்றும் விதி மீறல்கள் அடையாளம் காணப்பட்டன. எனவே, இந்த மரணத்தின் உண்மை தன்மையை வெளியில் கொண்டு வருவதற்கு பிரிவு 176 விசாரணை அவசியமாகிறது. மேலும், தனது கணவர் சித்ரவதை செய்யப்பட்டதால் இறந்துவிட்டார் என்று ராஜாவின் மனைவி அஞ்சுவின் சந்தேகம் நியாயமானதாக உள்ளது. இதை எளிதில் புறக்கணிக்க முடி யாது என்பதை நீதிமன்றமும் கருதி யுள்ளது. இரண்டாவது முறையாக நடந்த பிரேத பரிசோதனையில் நம்பகத்தன்மை இல்லை என்று ராஜா வின் மனைவி அஞ்சு, விசாரணை அதி காரியான விழுப்புரம் நீதிபதியிடம் புகார் மனு கொடுத்தபோது மூன்று முறை அலைக்கழித்து பிறகு மனுவை பெற்றனர். பாதிக்கப்பட்ட பெண் கொடுக்கும் புகார் மனுவை வாங்குவதற்கே போராட்டம் நடத்த வேண்டியுள்ளதால் இந்த வழக்கில் நியாயம் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், விசாரணை அதிகாரியான நடுவர் நீதிமன்ற நீதிபதி மீது புகார் தெரிவித்து உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் ஆகியோருக்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், இதுவரைக்கும் நடந்த பிரேத பரிசோதனையில் நம்பகத்தன்மை இல்லை என்பதால் மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த உயர்நீதிமன்றத்தை அணுக உள்ளோம். மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வரும் 21 ஆம் தேதி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.