districts

மின்கட்டணத்தை உயர்த்தக் கூடாது

புதுச்சேரி,பிப்.14- விலைவாசி உயர்வால் மின்சார கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று புதுச்சேரி கருத்து கேட்பு கூட்டத்தில் மார்க்சிஸ்ட கட்சி வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள யூனியன் பிரதேசங்களில் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய இணை ஒழுங்கு முறை மின்சார ஆணையம்  அமைக்கப் பட்டுள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் ஆண்டுதோறும் மின் கட்டணம் புதிதாக நிர்ண யிக்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான வீட்டு உப யோகத்துக்கு ஒரு யூனிட்டுக்கு சராசரி யாக 50 பைசா முதல் 75 பைசா வரை உயர்த்தப்பட உள்ளது. வர்த்தக பயன்பாட்டுக்கு சராசரியாக ஒரு ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி 2024-25 ம் ஆண்டுக்கு மின் கட்டண நிர்ண யம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள பிஎம்எஸ்எஸ் அரங்கத்தில் புதனன்று (பிப்-14) நடைபெற்றது. இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையத்தின் தலைவர் அலோக் டாண்டன், உறுப்பினர் ஜோதி பிரசாத் ஆகியோர் பொதுமக்களிடம் கருத்து கேட்டனர். கூட்டம் தொடங்கியவுடன்,  மின்துறை தலைவர் சண்முகம், 2023-24ம் ஆண்டின் மின் விற்பனை, 2024-25ம் ஆண்டு வருவாய் தேவை,  உத்தேச மின் கட்டண விவரம் ஆகியவற்றை விளக்கி பேசினார். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினர் வெ.பெருமாள் பங்கேற்று வலியுறுத்தியதாவது:- விலைவாசி உயர்வால் ஏழை எளிய மக்களும், வியாபாரிகளும் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த போதிய நட வடிக்கைகளை எடுக்கவில்லை. இந்த நிலையில் மின் கட்டணத்தை உயர்த்தினால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே பெரும் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய மின்பாக்கியை வசூலிக்க வேண்டும். மின்துறையை அரசு துறையாகவே செயல்பட வேண்டும். மின் துறையின் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என்று வலியுறுத்தினார். இதேபோல் பல்வேறு ஜனநாயக அமைப்புகளை சேர்ந்தவர்களும் மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும்  என்று வலியுறுத்தினர். முன்னதாக நிலுவை தொகை குறித்து செலுத்த வேண்டியவர்கள் விவரம் குறித்த எழுப்பிய கேள்விக்கு மின்துறையின் கண்காணிப்பு பொறி யாளர் சண்முகம் கூறுகையில்,  “ அரசு துறைகள் ரூ. 300 கோடியும், நுகர்வோர் ரூ. 200 கோடியும் நிலு வையில் வைத்துள்ளனர். நுகர்வோர் நிலுவைத்தொகை அடுத்த பில்லுக்குள் வசூலாகிவிடும். அரசு நிலுவைத்தொகையால் மக்களுக்கு பாதிப்பில்லை” என்று குறிப்பிட்டார். அப்பொழுது கூட்டத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.