districts

img

அரசுப்பள்ளி, கல்லூரிகளில் தரமான உணவு

நாமக்கல், ஜுன் 26- அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தரமான உணவுகளை வழங்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது, அரசு பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கக்கூடிய மாணவர்களுக்கு, தரமான உணவினை வழங்க வேண்டும். இதேபோன்று, கல்லூரி விடுதி மாணவர்களுக்கு வழங்க கூடிய உணவு படியை அரசு உயர்த்தி வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை வேண்டும். மாணவர்கள் விடுதிகளில் தரமற்ற,கெட்டுப்போன உணவு சாப்பிட்ட காரணத்தால் கொல்லிமலை ஏகலைவா உண்டு உறைவிட பள்ளியிலும், ராசிபுரம் நடுப்பட்டி நடுநிலை பள்ளியிலும் வயிற்று வலி மற்றும் தலைவலி மயக்கம் என உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைகளில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். எனவே அரசு பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கக்கூடிய மாணவர்களுக்கு தரமான உணவினை வழங்க உத்தரவாதப்படுத்த வேண்டும். அதே போல் விடுதி மாணவர்களுக்கு வழங்க கூடிய உணவு படியை நாள் ஒன்றுக்கு 60 ரூபாயாக அரசு உயர்த்தி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மனு அளிக்கும் இயக்கத்தில், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தே.சரவணன், மாவட்ட தலைவர் மு.தங்கராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் பொன்மணி செல்வன் மற்றும்  ஞானிதா, ராஜ சூர்யா மற்றும் விஷ்வா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.