மே.பாளையம், மார்ச் 12- மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை பகுதி அருகே வாழை தோட்டத்தினுள் புகுந்த 12 அடி நீள முள்ள ராட்சஷ முதலையை, இரண்டு மணி நேரம் போராடி வனத்துறையினர் பிடித்துள்ளனர். கடுமையான கோடை வெயிலின் காரணமாக, பவானி ஆறு வற்றி, அணையின் நீர்மட்டம் வெகு வாக குறைந்து வருகிறது. இதனால், அணையின் நீர் தேக்கத்தில் இருந்த முதலைகள் ஆங்காங்கே கரையோ ரம் தென்படுகின்றன. ஒரு சில முதலைகள் தரைப்பகு தியை நோக்கி வருகின்றன. இந்நிலையில் சிறுமுகை பகுதி காந்தையூர் கிரா மத்தில், தனக்கு சொந்தமான வாழைத்தோட்டத்திற்கு தண்ணீர் விட வந்த விவசாயி தமிழ்செல்வன் என்பவர், தனது தோட்டத்தின் நடுவே ராட்சஷ முதலை படுத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து சிறுமுகை வனச்சரக அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத் திற்கு வந்த வனத்துறையினர், பெரிய வலுவான நைலான் வலை மற்றும் கயிறுகள் கட்டி முதலையை பிடிக்க முயன்றனர். சுமார் மூன்று மணி நேரம் போராடி இறுதியில் முதலையை சுற்றிவளைத்து பிடித்தனர். பிடிப்பட்ட முதலையை பவானிசாகர் நீர்தேக்க பகு தியான, கூத்தாமண்டி பிரிவு டேம் காடு பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக விடுவித்தனர். பிடி பட்ட முதலை பெண் முதலையென்றும் நீர்தேக்க பகுதி கரையோரங்கள் வறண்ட நிலையில் இருப்பதால் இந்த முதலை முட்டையிட இடம் தேடி ஈரப்பதத்துடன் காணப் பட்ட வாழைத்தோட்டத்தினுள் புகுந்துள்ளது என வனத் துறையினர் தெரிவித்தனர்.